
இந்திய தேசிய நெடுஞ்சாலைத்துறையின் (NHAI) மூலம் 24 மணி நேரமும் இயங்கும் மேம்படுத்தப்பட்ட இலவச அவசர கால ஊர்தியினை, தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டத்தில் முதன்முறையாக பொதுமக்களின் பயன்பாட்டிற்காக, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று (17.03.2025) மாவட்ட ஆட்சித்தலைவர் இளம்பகவத் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
ஹிந்துஸ்தான் லைப் கேர் லிமிடெட் (HLL) நிறுவனத்தின் மூலம் இந்தியா முழுவதும் NHAIஉடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு இலவச அவசர கால ஊர்தி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக மேம்படுத்தப்பட்ட இலவச அவசர கால ஊர்தியினை முதற்கட்டமாக தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலையைப் பயன்படுத்துவோருக்காக செயல்படுத்தப்படுகிறது.
இந்த மேம்படுத்தப்பட்ட இலவச அவசர கால ஊர்தியில் கார்டியாக் மானிட்டர்ஸ் (இருதயத்துடிப்பு பரிசோதனை), வென்டிலேட்டர்ஸ் (செயற்கை சுவாசக் கருவி), டீபிப்ரிலேட்டர் (Defibrillator), தீவிர சிகிச்சைக்குத் தேவையான மருந்துகள் மற்றும் உபகரணங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. மேற்படி பணியினை கையாள்வதற்கு பயிற்சி பெற்ற 24 மணி நேரமும் செயல்படக்கூடிய மருத்துவக்குழு பணியில் இருப்பார்கள்.
பொதுமக்கள் இந்த மேம்படுத்தப்பட்ட அவசர கால ஊர்தி சேவையை பயன்படுத்திக் கொள்ள 1033 என்ற கட்டணமில்லா அலைபேசி எண்ணில் அழைக்கலாம். இந்த ஊர்தியானது மதுரை - தூத்துக்குடி (NH-38) தேசிய நெடுஞ்சாலையில் உள்ள புதூர் பாண்டியாபுரம் சுங்கச்சாவடியில் நிலைநிறுத்தப்பட்டிருக்கும். நிலையத்தில் இருந்து இருபுறமும் சுமார் 60 கிலோ மீட்டர் தூரத்திற்கு சேவை வழங்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.
இந்த நிகழ்ச்சியில், திட்ட இயக்குநர் (இந்திய தேசிய நெடுஞ்சாலை) வம் சர்மா, மண்டல திட்ட அலுவலர் (HLL, HLFPPT) ஜெகதீசன், தளப்பொறியாளர்கள் (இந்திய தேசிய நெடுஞ்சாலை) கலைச்செல்வன், வீர ராஜேஸ்மணி, அவசர கால ஊர்தி பயிற்சியாளர் யுகேஷ் (HLL, HLFPPT), அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் உடனிருந்தனர்.