
திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பக்தர் ஒருவர் பலியான சம்பவத்திற்கு வேதனை தெரிவித்துள்ள டிடிவி தினகரன், பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தரத் தவறிய இந்து சமய அறநிலையத்துறையின் அலட்சியப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது என்று குறிப்பிட்டுள்ளார்.
முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து முருகனை வழிபடுவது வழக்கம். முக்கியமான விழா நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களில் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர். அப்பொழுது வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக காணப்படும்.
இந்த நிலையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் பல்வேறு பகுதிகளில் இருந்தும் அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருகை தந்தனர். அந்த வகையில், சிவகங்கை மாவட்டம், காரைக்குடி பகுதியைச் சேர்ந்த ஓம்குமார் என்ற ஜவுளி வியாபாரி தனது குடும்பத்தினருடன் திருச்செந்தூர் கோவிலுக்கு வருகை தந்தார்.
ஓம் குமார் திருச்செந்தூர் கோவிலில் உள்ள 100 ரூபாய் கட்டண வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்ய கடும் கூட்ட நெரிசலில் காத்திருந்துள்ளார். அப்போது திடீரென அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அந்த இடத்திலேயே அவர் மயங்கி விழுந்துள்ளார். இதையடுத்து,108 ஆம்புலன்ஸில் அவரை ஏற்றி திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், "திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் தரிசனத்திற்காக வரிசையில் காத்திருந்த பக்தர் ஒருவர் கூட்ட நெரிசலில் சிக்கி மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்திருப்பதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றன.
நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வரும் சுப்பிரமணியசுவாமி கோயிலில் அவர்களுக்கான அடிப்படை வசதிகளை கூட செய்து தர தவறிய இந்துசமய அறநிலையத்துறையின் அலட்சியப்போக்கே பக்தரின் உயிரிழப்புக்கு காரணம் என சக பக்தர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
ஏற்கனவே கடந்த சில மாதங்களுக்கு முன்பு உணவு, குடிநீர் உள்ளிட்ட எந்தவித வசதிகளுமின்றி பக்தர்கள் அடைத்து வைக்கப்பட்டதாக புகார் எழுந்த போது, திருப்பதி கோயிலை சுட்டிக்காட்டி அலட்சியமாக பதில் கூறிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர், பக்தர் உயிரிழப்புக்கு என்ன காரணம் சொல்லப் போகிறார்?
எனவே, இனியும் அலட்சியப் போக்குடன் செயல்படாமல் திருக்கோயில்களுக்கு வரும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தருவதோடு, கூட்ட நெரிசலை சமாளிக்கும் வகையில் முறையான திட்டமிடலோடு முன்னேற்பாடுகளை செய்ய வேண்டும் எனவும் இந்து சமய அறநிலையத்துறையையும் தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்." எனத் தெரிவித்துள்ளார்