
திருச்செந்தூர் அருகே இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.1 கோடி மதிப்புள்ள பீடி இலைகளை கியூ பிரிவு போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே ஆலந்தலை ஊருக்கு வட புறம் உள்ள கடற்கரையில் கியூ பிரிவு ஆய்வாளர் விஜய அனிதா, உதவி ஆய்வாளர் ஜீவமணி தர்மராஜ், சிறப்பு உதவி ஆய்வாளர் ராமர் தலைமை காவலர் இருதயராஜ், குமார், இசக்கி முத்து, முதல் நிலை காவலர் பழனி, பாலமுருகன் ஆகியோர் இன்று அதிகாலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அங்கு இலங்கைக்கு படகுமூலம் கடத்துவதற்காக லோடு வேனில் கொண்டுவரப்பட்ட 30 கிலோ வீதம் 82 மூடைகளில் இருந்த பீடி இலைகளை பறிமுதல் செய்துளள்னர். இதனை கடத்த முயன்ற மர்ம நபர்கள் படகுடன் தப்பித்துச் சென்று விட்டார்கள். அவர்கள் பயன்படுத்திய 2 பைக்குகள் கைப்பற்றப்பட்டுள்ளது. கைப்பற்றபட்ட பீடி இலைகளின் மதிப்பு சுமார் 1 கோடி ஆகும். பீடி இலைகள் சுங்கத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.