தினமலர் முன்னாள் ஆசிரியர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி மறைவை தொடர்ந்து, தூத்துக்குடி பத்திரிக்கையாளர் மன்ற அலுவலகத்தில் அவரது திருஉருவப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
சுமார் 40 ஆண்டுகளுக்கு மேலாக முனைவர் இரா.கிருஷ்ணமூர்த்தி, தினமலர் நாளிதழ் ஆசிரியராக சிறப்புடன் பணியாற்றினார். தமிழகத்தின் தென்கோடியான குமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே வடீவீஸ்வரம் என்ற கிராமத்தில் 18.01.1933-ல் பிறந்தார் . இவரது தந்தை ஸ்ரீ டி.வி.ராமசுப்பையருக்கு பிறகு தினமலர் ஆசிரியர் பொறுப்பேற்ற இவர், தினமலர் நாளிதழை மிக உயர்ந்த இடத்திற்கு கொண்டு வந்தார். திருச்சி, சென்னை, மதுரை, ஈரோடு, கோவை, புதுச்சேரி, வேலூர், நாகர்கோவில் நகரங்களில் தினமலர் பதிப்புகளை துவக்க காரணமாக இருந்தார். 2017 வரை ஆசிரியர் பொறுப்பு வகித்தார்.
இவர் சங்க காலத்தில் பழந்தமிழ் மன்னர்கள் வெளியிட்ட நாணயங்களை கண்டுபிடித்து பெரும் ஆய்வு மேற்கொண்டவர். நாளிதழில் தமிழ் எழுத்து சீர்திருத்தம் முதன் முதலில் கண்டவர், கணினியில் தமிழ் பயன்பாட்டுக்கு ஏற்ற வகையில் எழுத்துருக்களை உருவாக்கியவர் என்ற பெருமையையும் கொண்டவர். நாணயவியல் தொடர்பாக 30 க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதி உள்ளார்.
தமிழ் செம்மொழி என்ற தகுதியை பெற, இவரது நாணயவியல் கண்டுபிடிப்புகளை தமிழக அரசு முக்கிய வரலாற்று ஆதாரமாக சமர்ப்பித்தது. தமிழுக்கு இவர் செய்த நற்பணியை பாராட்டி 2012-2013 ஆண்டுக்கான தொல்காப்பியர் விருது குடியரசு தலைவரால் வழங்கப்பட்டது.பத்திரிகையை துறையில் சிறந்து விளங்கியதால் தமிழ் அச்சு மொழி வளர்ச்சியைப் பண்படுத்தியவர். கணினிக்கு ஏற்றவகையில், தமிழ் எழுத்துக்களை நவீனப்படுத்தி, தெளிவுமிக்க தமிழ் எழுத்துருக்களை உருவாக்கியவர். இப்படி, பன்முகத்திறன்கள் படைத்த முனைவர் இரா.கிருஷ்ணமூர்த்தி இன்று ( 4.3.2021) காலமானார்.
இதனையடுத்து, தூத்துக்குடி பத்திரிக்கையாளர் மன்றம் சார்பில், தூத்துக்குடி பத்திரிக்கையாளர் மன்ற அலுவலகத்தில் அவரது திருஉருவப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்நிகழ்வில், தூத்துக்குடி பத்திரிக்கையாளர் மன்ற தலைவர் சண்முகசுந்தரம்,
இணைச்செயலாளர் சிதம்பரம், மூத்த பத்திரிக்கையாளர்கள் அருண், மகாராஜன், அண்ணாத்துரை, ஆத்திமுத்து, மற்றும் முரளி கணேஷ், காதர் மொகைதீன், மாரிராஜா, பாலகுமார், சாதிக்கான், வள்ளிராஜ் உள்ளிட்ட பத்திரிக்கையாளர் மன்ற உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.