
தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த எழுத்தாளரும், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க நிர்வாகியுமான நாறும்பூநாதன் ( 66 ) காலமானார்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே கழுகுமலையில் பிறந்த நாறும்பூநாதன், தனது பள்ளி, கல்லூரி படிப்பை கோவில்பட்டியில் முடித்தார். திருமணத்திற்கு பின், குடும்பத்துடன் திருநெல்வேலிக்கு குடிபெயர்ந்தார்.
கல்லூரி காலங்களில் சிறுகதை எழுத தொடங்கி, தொடர்ந்து நாவல், கட்டுரை என பல நூல்களை எழுதியுள்ளார். பாரத ஸ்டேட் வங்கியில் 30 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றார். தற்போது இலக்கிய பணிகளை தொடர்ந்து இயங்கி வந்தார்.
இந்த நிலையில், இன்று உடல்நலக்குறைவால் நாறும்பூநாதன் உயிரிழந்தார். அவரது மறைவு எழுத்தாளர்கள், வாசகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவிற்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
2022 ஆம் ஆண்டு தமிழறிஞர் உ.வே.சா விருதை தமிழக அரசு இவருக்கு வழங்கி சிறப்பித்தது. இவரது சிறுகதை தொகுப்பான "கனவில் உதிர்ந்த பூ" பாளையங்கோட்டை சதக்கத்துல்லா அப்பா தன்னாட்சி கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களின் பாடநூலாக உள்ளது.
"யானை சொப்பனம்" நூலின் கட்டுரைகள் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களின் பாட நூலாக உள்ளது குறிப்பிட தக்கது.