
ஓடும் பேருந்தில் பெண்ணிடம் பிக்-பாக்கெட் அடிக்க முயன்ற தூத்துக்குடியைச் சேர்ந்த இரண்டு பெண்களை போலீசார் கைது செய்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டம் அருகே பாகோடு வட்டவிளை பகுதியைச் சேர்ந்தவர் தங்கராஜன் மனைவி சீதாதேவி ( 49 ). இவர் நேற்று முன்தினம் வட்டவிளையில் இருந்து மார்த்தாண்டத்திற்கு அரசு பேருந்தில் சென்று கொண்டிருந்தார்.
பேருந்து வெட்டு வெந்நி பகுதியில் சென்ற போது, சீதா தேவியின் பின்னால் நின்றிருந்த இரண்டு பெண்கள் அவர் வைத்திருந்த பர்சில் கையைவிட்டு, அதில் இருந்த ரூபாய் 2000-த்தை நைசாக திருட முயன்றனர்.
இதை சீதாதேவி பார்த்து திருடி... திருடி... என சத்தம் போட்டார். இதனை அடுத்து பணத்தை திருட முயன்ற இரண்டு பெண்களும் தப்ப முயன்றனர். ஆனால் பஸ்ஸில் இருந்தவர்கள் சுதாரித்துக் கொண்டு, இரண்டு பெண்களையும் மடக்கிப்பிடித்தனர். பின்னர் இரண்டு பேரையும் மார்த்தாண்டம் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
விசாரணையில், அவர்கள் இருவரும் தூத்துக்குடி அண்ணாநகரை சேர்ந்த மாணிக்கம் மனைவி அஞ்சலி ( 29 ), அருள்பாண்டி மனைவி பவானி ( 27 ) என்பது தெரியவந்தது. இவர்கள் மீதும் ஏற்கனவே தென்காசி மாவட்டம் கடையம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரியவந்தது.
தற்போது கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு கோவில்களில் திருவிழா நடந்து வருவதால் பெண்களிடம் பணம், நகை பறிக்க திட்டமிட்டுள்ளனர். இதனால் இங்கு வந்து பல இடங்களில் சுற்றி திரிந்துள்ளனர். பிடிபட்ட இரண்டு பெண்களையும் போலீசார் கைது செய்து குழித்துறை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திவிட்டு தக்கலில் உள்ள பெண்கள் சிறையில் அடைத்தனர். பிடிபட்ட பெண்களுடன் வேறு யாரும் வந்தார்களா? என்பது குறித்து தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.