
நகைக்கடை தொழில் அதிபரை பணத்திற்காக கடத்தி கொலை செய்ய முயன்றதாக கூலிப்படையைச் சேர்ந்த மூன்று பேரை, போலீசார் கைது செய்தனர்.
சென்னை தெற்கு போலீஸ் இணை கமிஷனர் சிபி சக்கரவர்த்தி தலைமையில், வேளச்சேரி, தரமணி, மடிப்பாக்கம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு போலீசார் தீவிர வாகன சோதனை நடத்தினர்.
வேளச்சேரி - தரமணி சாலையில் நடத்திய சோதனையில், துாத்துக்குடி தாளமுத்து நகரைச் சேர்ந்த வினோத் ( 27 ), மணலியைச் சேர்ந்த பாலமுருகன் ( 23 ), மாதவரத்தைச் சேர்ந்த சுரேஷ் ( 35 ), ஆகியோரை மடக்கி விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், மூன்று பேரும், பரங்கிமலை காவல் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு நகைக்கடை தொழில் அதிபரை பணத்திற்காக கடத்தி கொலை செய்ய திட்டமிட்டு இருந்தது தெரியவந்தது.
ரகசிய தகவல், நவீன தொழில்நுட்ப உதவியுடன் இவர்களை கைது செய்தோம். இவர்கள் கூலிப்படையை சேர்ந்தவர்கள். இச்சம்பவத்திற்கு, தூண்டு கோலாக இருந்தவர்கள் குறித்து, தீவிர விசாரணை நடத்துகிறோம். ஏற்கனவே, வினோத் மீது ஒரு கொலை உள்ளிட்ட ஐந்து வழக்குகள், பாலமுருகன் மீது ஆள்கடத்தல் உட்பட நான்கு வழக்குகள், சுரேஷ் மீது மூன்று வழக்குகள் உள்ளன. என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.