
தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தால் 3 யூனிட்களில் மின்சார உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. நேற்று இரவு முதல் தற்போது வரை தீயை அணைக்கும் பணி நடந்து வருகிறது.
தூத்துக்குடியில் தமிழக அரசுக்கு சொந்தமான அனல் மின் நிலையத்தில் 5 யூனிட்டுகள் மூலம் மொத்தமாக 1050 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று இரவு சுமார் 10 மணியளவில் 1 மற்றும் 2 வது யூனிட்டில் குளிரூட்டும் அறையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
இதனால், அந்த அறையில் இருந்த மின்சார ஒயர்கள் எரிந்து நாசமாகின. உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை பரவ விடாமல் அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதில் பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகி உள்ளதாக கூறப்படுகிறது.
கேபிள் கேலரி பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில், அனைத்து பகுதிகளையும் இணைக்கும் மின்சார ஒயர்கள் எரிந்ததால், 3 யூனிட்களில் மின்சார உற்பத்தி நிறுத்தப்பட்டது. இதனால் சுமார் 630 மெகாவாட் மின்சார உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. பல மணி நேரம் வரை தீயை அணைக்கும் பணி நடந்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.