• vilasalnews@gmail.com

துக்க வீட்டிலும் கைவரிசையா.. இறந்த பெண்ணின் உடலில் இருந்த நகை திருடிய வாலிபர் கைது

  • Share on

ஏரல் அருகே துக்க வீட்டில் இறந்த பெண்ணின் உடலுக்கு மாலை அணிவிப்பது போன்று நகையை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.


தூத்துக்குடி மாவட்டம்,  ஏரல் வண்டிக்கார தெருவைச் சேர்ந்தவர் முரசொலி மாறன். இவர் ஸ்ரீவைகுண்டம் அருகே பேட்மாநகரத்தில் உள்ள கல்குவாரியில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி மகேஸ்வரி (30). இவர் கடந்த சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டதால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.


இந்நிலையில், மகேஸ்வரி கடந்த 12 ஆம் தேதி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். நேற்று முன்தினம் அவரது உடலுக்கு இறுதிச்சடங்கு நடத்தப்பட்டு மயானத்துக்கு கொண்டு சென்று அடக்கம் செய்ய ஏற்பாடு செய்தனர். இதையடுத்து அவரது உடலில் அணிந்திருந்த நகைகளை உறவினர்கள் கழற்ற முயன்றனர்.


அப்போது, மகேஸ்வரியின் கழுத்தில் கிடந்த 5¾ பவுன் தாலி சங்கிலி மாயமானதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து முரசொலி மாறன் மஞ்சள் கயிற்றால் மனைவிக்கு தாலி அணிவித்த பின்னர் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.


துக்க வீட்டில் மனைவியின் தாலி சங்கிலி மாயமானது குறித்து முரசொலி மாறன் ஏரல் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில்,  வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்றது. விசாரணையில், துக்க வீட்டுக்கு வந்த உறவினர் ஒருவர் ஏரல் அருகே கணபதிசமுத்திரத்தைச் சேர்ந்த தங்கத்துரை மகன் தொழிலாளியான கொழுந்துவேல் (38) என்பவரை உதவிக்கு அழைத்து வந்தது தெரியவந்தது.


மகேஸ்வரியின் உடலை உறவினர்கள் குளிப்பாட்டி புது துணி உடுத்திய பின்னர் பிரீசரில் தூக்கி வைத்தபோது, அவர்களுக்கு உதவி செய்வது போன்று நடித்த காெழுந்துவேல், மாலை அணிவித்தபோது நகையை நைசாக திருடியது தெரிய வந்தது. எனவே, கொழுந்துவேலை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்த நகையை மீட்டனர். பின்னர் அவரை ஸ்ரீவைகுண்டம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

  • Share on

குவாரி இயந்திரத்தில் சிக்கி ஓட்டப்பிடாரம் வாலிபர் பலி!

தூத்துக்குடி அருகே கொலை... விடுதியில் தங்கி இருந்த மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு... 2 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது!

  • Share on