
தமிழக சட்டப்பேரவையில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று தாக்கால் செய்த 2025-26 ஆம் நிதி ஆண்டுக்கான தமிழக பொது பட்ஜெட்டில் தூத்துக்குடிக்கான பல முக்கிய அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன.
தமிழக சட்டப்பேரவை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், இன்றைய தினம் பட்ஜெட் தாக்கலாகி உள்ளது. இவை, நிதி அமைச்சராக தங்கம் தென்னரசு தாக்கல் செய்துள்ள 2வது பட்ஜெட் ஆகும். "எல்லார்க்கும் எல்லாம்" என்ற கருப்பொருளில் இந்த பட்ஜெட்டை அமைச்சர் தாக்கல் செய்துள்ளார்.
சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால், அடுத்த ஆண்டில் இடைக்கால பட்ஜெட்டாக மட்டுமே தாக்கல் செய்ய முடியும். அந்த வகையில், இன்றைய பட்ஜெட்தான் இந்த அரசு தாக்கல் செய்யும் 5 வது மற்றும் முழுமையான பட்ஜெட் ஆகும்.
2025-26 ஆம் நிதி ஆண்டுக்கான தமிழக பொது பட்ஜெட்டை, சட்டப்பேரவையில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று (மார்ச் 14) காலை சரியாக 9.30 மணியளவில் தாக்கல் செய்தார். தமிழக பட்ஜெட் உரையில் இடம்பெற்றுள்ள தூத்துக்குடி மாவட்டத்திற்கான அறிவிப்புகளை பார்க்கலாம். வாங்க
மதுரை, கோயம்புத்தூர், திருச்சி, சேலம், திருப்பூர், ஈரோடு, தூத்துக்குடி, வேலூர், தஞ்சாவூர் மற்றும் திண்டுக்கல் உள்ளிட்ட மாநகராட்சிகளில் 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில், மூத்த குடிமக்களுக்கான 25 அன்புச்சோலை மையங்கள் அமைக்கப்படும், என்று தமிழ்நாடு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு உள்ளது.
நீலகிரி மாவட்டம் குன்னூர், திண்டுக்கல் மாவட்டம் நத்தம், சென்னை மாவட்டம் ஆலந்தூர், விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி, செங்கல்பட்டு மாவட்டம், சிவகங்கை மாவட்டம் மானாமதுரை, திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை, தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர், பெரம்பலூர் மாவட்டம் பெரம்பலூர் மற்றும் தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் ஆகிய இடங்களில் புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் செயற்கை இழை மற்றும் தொழில்நுட்ப ஜவுளி தொழிற்பூங்கா அமைக்கப்படும்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 639 ஊரக குடியிருப்புகளுக்கான கூட்டுக் குடிநீர்த் திட்டம் ஒன்று 370 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 1.3 இலட்சம் மக்கள் பயன்பெறும் வகையில் மேற்கொள்ளப்படும்.
தமிழ்ப் பண்பாட்டின் சிறப்புகளை உலகறியச் செய்திடும் முயற்சியின் தொடர்ச்சியாக, எதிர்வரும் 2025-26 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் தொல்லியல் அகழ்வாராய்ச்சிகள் சிவகங்கை மாவட்டம் - கீழடி, தூத்துக்குடி மாவட்டம் - பட்டணமருதூர், தென்காசி மாவட்டம் - கரிவலம்வந்தநல்லூர், நாகப்பட்டினம் மாவட்டம்- நாகப்பட்டினம், கடலூர் மாவட்டம் - மணிக்கொல்லை, கள்ளக்குறிச்சி மாவட்டம் - ஆதிச்சனூர், கோயம்புத்தூர் மாவட்டம் - வெள்ளளூர் மற்றும் சேலம் மாவட்டம் - தெலுங்கனூர் ஆகிய இடங்களில் மேற்கொள்ளப்படும். வரும் நிதியாண்டில் தொல்லியல் அகழ்வாராய்ச்சி மற்றும் அறிவியல் ஆய்வுகள் மேற்கொள்ள 7 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும்.