
தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரத்தில் அரசு கலைக் கல்லூரி அமைக்கப்படும் என்ற அறிவிப்பு ஒட்டப்பிடாரம் தொகுதி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
2025 - 2026 ஆம் நிதி ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டை, சட்டப்பேரவையில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று காலை தாக்கல் செய்தார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில், பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. "எல்லார்க்கும் எல்லாம்" என்ற தீம் உடன் இந்த பட்ஜெட்டை அமைச்சர் தாக்கல் செய்துள்ளார்.
அதில், உயர்க்கல்வித் துறைக்கு பட்ஜெட்டில் வெளியான அறிவிப்புகளில் தமிழ்நாட்டில் புதிதாக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் அமைக்கப்படும் என்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தார்.
குன்னூர், நத்தம், ஆலந்தூர், விக்கிரவாண்டி, செய்யூர், மானாமதுரை, முத்துப்பேட்டை, திருவிடைமருதூர், பெரம்பலூர், ஒட்டப்பிடாரம் ஆகிய இடங்களில் 10 புதிய கலை அறிவியல் கல்லூரிகள் அமைக்கப்படும் என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தார்.
தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரம் சட்டப்பேரவை தொகுதியானது திருநெல்வேலி மாவட்ட எல்லையான வசவப்பபுரத்தில் துவங்கி தூத்துக்குடி எல்லை பகுதியான தாளமுத்து நகரில் முடிவடைகிறது.
2 லட்சத்து 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்களை கொண்ட இந்தத் தொகுதியில் பெரிய நகராட்சிகள், பேரூராட்சிகள் எதுவும் கிடையாது. 250க்கும் மேற்பட்ட கிராமங்களை உள்ளடக்கிய ஒட்டப்பிடாரம் தொகுதியில் விவசாயம் மட்டுமே பிரதான தொழிலாக உள்ளது.
அதிக பள்ளிகள் உள்ள இத்தொகுதியில் மாணவ - மாணவிகள் கல்லூரி படிப்புக்காக வெளியூர்களுக்கு செல்ல வேண்டி நிலைதான் இப்போதும் உள்ளது.
ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி மாணவர்கள் கல்லூரி படிப்புக்காக திருநெல்வேலிக்கோ கோவில்பட்டிக்கோ, தூத்துக்குடிக்கோ அல்லது ஸ்ரீவைகுண்டம் செல்ல வேண்டியுள்ளது.
ஓட்டப்பிடாரம் சட்டப்பேரவை தொகுதியில் அரசு கலைக்கல்லூரி அமைத்து தரவேண்டும் என்பதுதான் அத்தொகுதி பொதுமக்களின் நீண்டகால கோரிக்கை ஆகும். இந்தநிலையில், தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைக்கப்படும் என்ற அறிவிப்பு ஒட்டப்பிடாரம் தொகுதி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.