
மழைவெள்ளத்தில் சேதமடைந்த ஏரல் தாமிரபரணி ஆற்றுப்பாலத்தில் சீரமைப்பு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளுக்கு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் உத்தரவிட்டார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் பெய்த கனமழையால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதில், ஏரல் தாமிபரணி ஆற்றின் உயர்மட்ட பாலத்தின் வட பகுதியில் இணைப்பு சாலை அரிப்பு ஏற்பட்டு பலத்த சேதம் அடைந்தது. இதனால் புதிய உயர்மட்ட பாலத்தில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து, தற்காலிகமாக அருகில் பழுதாகி கிடந்த தரைமட்ட பாலத்தை சீரமைத்து போக்குவரத்து நடந்து வருகிறது.
மேலும், சேதமடைந்த புதிய உயர்மட்ட பாலத்தை சீரமைக்க அரசு ரூ.6.95 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இ்ந்த நிதியில் நெடுஞ்சாலை துறை மூலம் சீரமைப்பு பணி நடந்து வருகிறது. இதில் பாலத்தில் கூடுதலாக 2 தூண்கள் அமைத்து, பாலத்தை நீட்டித்து இணைப்பு சாலை அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் நேற்று ( மார்ச் 13) காலையில் ஏரல் ஆற்றுப்பாலத்திற்கு நேரில் சென்று சீரமைப்பு பணிகளை ஆய்வு செய்தார்.
அப்போது, சீரமைப்பு பணிகள் குறித்து நெடுஞ்சாலை துறை உதவி கோட்ட பொறியாளர் சின்னச்சாமி, உதவி பொறியாளர் பரமசிவம் மற்றும் நீர்வளத்துறை செயற்பொறியாளர் வசந்தி ஆகியோர் ஆட்சியரிடம் விளக்கம் அளித்தனர். தொடர்ந்து சீரமைப்பு பணிகளை ஆய்வு செய்த ஆட்சியர், இந்த பணிகளை விரைவாக முடித்து போக்குவரத்து தொடங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்த ஆய்வின் போது, ஏரல் தாசில்தார் செல்வகுமார், ஏரல் பேரூராட்சி செயல் அலுவலர் சுப்பிரமணியன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.