
மாணவர்களிடையே சாதிய உணர்வுகளை விதைக்கூடிய நபர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை கடுமையாக இருக்கும் என மாவட்ட ஆட்சித்தலைவர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் வட்டம், ஸ்ரீகுமரகுருபர சுவாமிகள் அரசு உதவிப்பெரும் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் இன்று (12.03.2025) மாவட்ட ஆட்சித்தலைவர் இளம்பகவத் பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடினார்.
அப்போது மாவட்ட ஆட்சித்தலைவர் இளம்பகவத் தெரிவித்ததாவது:-
மாணவர்களிடம் சமத்துவ விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்தில், எந்தவித பாகுபாடும் இல்லாத மனநிலையை உருவாக்கிட ஸ்ரீகுமரகுருபர சுவாமிகள் அரசு உதவிப்பெரும் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மாவட்ட நிலை அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இந்த நிகழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறோம்.
அனைத்து மாணவர்களும் தெளிந்த ஒரு மனதோடுதான் பள்ளிகளுக்கு வருகிறார்கள். காலப்போக்கில் அவர்களுடைய மனதில் இருக்கக்கூடிய சங்கடங்கள் அவர்களை திசை மாறிச் செல்ல வழிவகுக்கிறது. ஆகையால் அவர்களுடன் பேசி அவர்களுடைய மனதில் இருக்கும் சங்கடங்கள் என்னவென்று அறிந்து அவர்கள் திசை மாறிசெல்லாமல் இருக்க ஆசிரியர்களாகிய நீங்கள் முழு கவனத்துடன் செயல்பட வேண்டும்.
மாணவர்களிடையே நிலவும் சமத்துவமற்ற மனநிலையை மாற்ற மாணவர்களுக்கு சமூகநீதி உறுதிமொழி இன்று எடுக்கப்பட்டது. பள்ளியில் சாதிய உணர்வுகளை தூண்டக்கூடிய வகையில் இருக்கக்கூடிய வாசகங்கள் எழுதப்பட்டிருந்த அனைத்து இடங்களிலும் முழுமையாக தூய்மைபடுத்தும் பணியினை மாணவர்களை ஈடுபடுத்தி அளிக்கப்பட்டது.
சமத்துவமற்ற மனநிலையை கல்விக்கூடங்களுக்கு உள்ளேயும், வெளியேயும் மாணவர்கள் மனதில் விதைக்கக்கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளோம். சாதிய உணர்வுகளை விதைக்கூடிய நபர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை கடுமையாக இருக்கும் என்பதை மாணவர்களிடம் எடுத்து கூறியுள்ளோம்.
இது தொடர்பான தொடர் விழிப்புணர்வு நடவடிக்கைகளை அடுத்தடுத்து பள்ளிக்கூடங்களிலும் தொடர்ந்து ஏற்படுத்தி வருவதற்கு திட்டமிட்டுள்ளோம். இந்த விழிப்புணர்வானது குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், குழந்தைகள் நலக்குழு தலைவர், ஆதிதிராவிடர் நல அலுவலர், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், கல்வித்துறை அலுவலர்கள், மாவட்ட சமூக நலத்துறை அலுவலர்கள், காவல்துறை அலுவலர்கள் அனைவரும் ஒன்றிணைந்து அடுத்தடுத்த நாட்களில் தொடர்ந்து எல்லா அரசு, அரசு உதவிப்பெறும் பள்ளிகளிலும், தனியார் பள்ளிகளிலும் தொடர் விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளோம் என மாவட்ட ஆட்சித்தலைவர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அல்பர்ட் ஜான், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் கணேச மூர்த்தி, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் பெனட் ஆசீர், மாவட்ட சமூக நல அலுவலர் செல்வி பிரேமலதா, குழந்தைகள் பாதுகாப்பு குழு தலைவர் ரூபன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.