
தூத்துக்குடி மாநகராட்சி சொத்து வரி உயர்வு நோட்டீஸ்க்கு தடை விதித்து மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த முருகன் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில்:-
தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் நகர்புற உள்ளாட்சி அமைப்புகள் விதிகளின்படி, ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே சொத்து வரிகளை மறுசீரமைப்பு ( உயர்த்த ) செய்ய வேண்டும். கடந்த 2022 ஆம் ஆண்டு தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சொத்துவரி நிர்ணயம் செய்து வசூல் செய்யப்பட்டது.
இந்த நிலையில் 2027 ஆம் ஆண்டு தான் மீண்டும் மறு சீரமைப்பு செய்து சொத்து வரியை உயர்த்தி வசூல் செய்ய வேண்டும். ஆனால் 2024 - 25 ஆம் ஆண்டுக்கான சொத்து வரியை பழைய சொத்து வரியை விட 4 மடங்கு உயர்த்தி சொத்து வரி செலுத்த வேண்டும் என நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.
இது தமிழ்நாடு நகர்புற உள்ளாட்சி அமைப்பு விதிகளுக்கு எதிரானதாக உள்ளது. எனவே தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் 2024 - 25ஆம் ஆண்டுக்கான சொத்து வரியை உயர்த்தி வழங்கப்பட்ட நோட்டீஸிற்கு இடைக்கால தடைவிதித்து, சொத்துவரி உயர்வை ரத்து செய்ய உத்திரவிட வேண்டும் இவ்வாறு கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஜெ.நிஷா பானு, எஸ்.ஸ்ரீமதி ஆகியோர் தூத்துக்குடி மாநகராட்சியில் 2024 - 25 ஆம் ஆண்டுக்கான உயர்த்தப்பட்டுள்ள சொத்து வரி நோட்டீஸிற்கு இடைக்கால தடை விதித்தனர். மேலும், மனுவிற்கு தூத்துக்குடி மாநகராட்சி கமிஷனர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தனர்.