
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் நள்ளிரவில் மர்ம கும்பல் அட்டகாசத்தில் ஈடுபட்டு வேன் உரிமையாளரை தாக்கி, 10 க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களை அடித்து நொறுக்கி அராஜகம் என்று தனியார் தொலைக்காட்சி செய்தி வெளியிட்டதற்கு தூத்துக்குடி மாவட்ட காவல்துறை மறுப்பு தெரிவித்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நடராஜபுரம் பகுதியைச் சேர்ந்த வேன் ஓட்டுனரான சண்முகம் மகன் சங்கரநாராயணன் (55) என்பவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சின்னபாண்டி மகன் கார்த்தி (21) என்பவருக்கும் முன்விரோதம் இருந்துவந்துள்ளது.
இந்நிலையில் நேற்று (10.03.2025) நள்ளிரவு 11.30 மணியளவில் சங்கரநாராயணன் தனது வேனை ஒட்டிக்கொண்டு நடராஜபுரம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது அங்கு இருந்த மேற்படி கார்த்தி, 2 இளஞ்சிறார்கள் மற்றும் சிலர் சேர்ந்து முன்விரோதம் காரணமாக சங்கரநாராயணனை தாக்கி அவரது வேனை சேதப்படுத்தி தப்பிச் சென்றுள்ளனர்.
இதுகுறித்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு உடனடியாக கார்த்தியை கைது செய்தும், 2 இளஞ்சிறாரார்களை கையகப்படுத்தியும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தலைமறைவான மற்றவர்களையும் தேடிவருகின்றனர்.
மேற்படி சம்பவத்தின் உண்மை தண்மை தெரியாமல் பிரபல செய்தி தொலைக்காட்சி ஒன்று கோவில்பட்டியில் நள்ளிரவில் மர்ம கும்பல் அட்டகாசத்தில் ஈடுபட்டு வேன் உரிமையாளரை தாக்கி, 10ற்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களை அடித்து நொறுக்கி அராஜகம் என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டதற்கு தூத்துக்குடி மாவட்ட காவல்துறை மறுப்பு தெரிவித்துள்ளது.
மேலும் இதுபோன்ற வழக்குகளில் வழக்கின் விசாரணை நடைபெற்று வரும் நிலையில் அதன் உண்மை தன்மை தெரியாமல் செய்தி வெளியிட வேண்டாம் எனவும் மாவட்ட காவல்துறை தெரிவித்துக் கொள்கிறது. என தெரிவிக்கப்பட்டுள்ளது.