
கொரோனா காலத்தில் சேவையை நிறுத்திய ஒரு தனியார் விமான நிறுவனம் மீண்டும் தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கும், பெங்களூருக்கும் விமான சேவையை தொடங்க உள்ளதாம். கூடுதல் விமானங்கள் வருகிற 30 ஆம் தேதி முதல் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சென்னைக்கு அடுத்த படியாக உள்ள பெரிய துறைமுகம் தூத்துக்குடி துறைமுகம் தான். இதனால் தூத்துக்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான தொழில் நிறுவனங்கள் அமைந்துள்ளது. இதன் காரணமாக வளரும் நகரங்கள் வரிசையில் உள்ள தூத்துக்குடி நகரம், தற்போது மிக வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது.
தூத்துக்குடி நகரம் மட்டும் வேகமாக வளர்வதுடன் அல்லாமல் தனது அருகில் உள்ள திருநெல்வேலியையும் அது சேர்த்து வளர்ச்சி அடைய செய்கிறது என்று சொல்லும் அளவிற்கு தூத்துக்குடி காணப்படுகிறது. இந்த காரணங்களால் தென் மாவட்டங்களில் உள்ளவர்கள் தூத்துக்குடி விமான நிலையத்தை பயன்படுத்துவது அதிகரித்துள்ளது.
ஆகவே, தூத்துக்குடி விமான நிலையம் பெரிய விமானங்கள் வந்து இறங்கும் வகையில் விரிவாக்கப்பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. இந்த பணிகள் முடியும் போது பெரிய விமானங்கள் எளிதாக வந்து தரையிறங்க முடியும்.
தற்போது தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு ஒரு தனியார் விமான நிறுவனம் மூலம் தினமும் 4 சேவைகள் வழங்கி வருகின்றன. இதே போன்று பெங்களூருக்கும் விமான சேவை இருக்கிறது. இந்த நிலையில், கொரோனா காலத்தில் சேவையை நிறுத்திய ஒரு தனியார் விமான நிறுவனம் மீண்டும் தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கும், பெங்களூருக்கும் விமான சேவையை வருகிற 30 ஆம் தேதி தொடங்குகிறது. இதற்காக விரைவில் தூத்துக்குடி விமான நிலையத்தில் அலுவலகத்தை திறக்கவும் முடிவு செய்திருக்கிறது.
அந்த குறிப்பிட்ட தனியார் விமான நிறுவனம் மூலம் சென்னைக்கு 2 சேவையும், பெங்களூருக்கு ஒரு விமான சேவையும் வழங்க உள்ளது. அதன் படி சென்னையில் இருந்து காலை 6 மணிக்கு புறப்படும் விமானம் தூத்துக்குடிக்கு 7.40 மணிக்கு வந்தடையும். தூத்துக்குடியில் இருந்து மதியம் 12.10 மணிக்கு புறப்படும் விமானம் மதியம் 1.45 மணிக்கு சென்னையை சென்றடையும். மதியம் 2.20 மணிக்கு சென்னையில் இருந்து புறப்படும் மற்றொரு விமானம் மாலை 3.55 மணிக்கு தூத்துக்குடி வந்தடையும். தூத்துக்குடியில் இருந்து மாலை 4.55 மணிக்கு புறப்படும் விமானம் 6.30 மணிக்கு சென்னையை சென்றடையும்.
அதே போல், தூத்துக்குடியில் இருந்து காலை 8 மணிக்கு புறப்படும் விமானம் 9.35 மணிக்கு பெங்களூருவை சென்றடையும். பெங்களூருவில் இருந்து காலை 9.55 மணிக்கு புறப்படும் விமானம் 11.45 மணிக்கு தூத்துக்குடி வந்தடையும். இந்த விமானங்களுக்கான டிக்கெட் முன்பதிவை, அந்த நிறுவனம் தற்போது தொடங்கி உள்ளது. தூத்துக்குடி விமான நிலையத்தில் கூடுதல் விமானங்கள் இயக்கப்படுவதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.