
தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக வெயில் வாட்டி எடுத்த நிலையில், இன்று அப்படியே கிளைமேட் மாறியது. அனலான தமிழகம் இன்று அப்படியே ஜில்லென மாறியது.
குறிப்பாக தென் மாவட்டங்களில் இன்று அதிகாலை முதலே மழை கொட்ட ஆரம்பித்தது. தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் இன்று காலையில் இருந்தே கனமழை கொட்டி தீர்த்தது.
அதே போன்று சென்னை, திருவள்ளூர் மற்றும் டெல்டா மாவட்டங்களிலும் இன்று மழை பெய்தது. தலைநகர் சென்னையில் மதிய நேரத்தில் பல்வேறு இடங்களில் பரவலான மழை பெய்தது. இந்த நிலையில் அடுத்த இரண்டு மணி நேரத்தில் தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர் உள்பட 12 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேலும், தமிழக கடலோரப் பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று (11-03-2025) தமிழகத்தில் அநேக இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும் விருதுநகர், சிவகங்கை, மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது
இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று 11.3.2025 காலை 6:30 முதல் மாலை 6:30 மணி வரை பெய்த மழைப்பொழிவின் விவரத்தினை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதன்படி,
தூத்துக்குடி 27 மி.மீ
ஸ்ரீவைகுண்டம் 18.4 மி.மீ
திருச்செந்தூர் 37 மி.மீ
காயல்பட்டினம் 16 மிமீ
குலசேகரப்பட்டினம் 53 மி.மீ
சாத்தான்குளம் 14.4 மி.மீ
கோவில்பட்டி 15 மி.மீ
கழுகுமலை 10 மி.மீ
கயத்தார் 12 மி.மீ
கடம்பூர் 5.6 மி.மீ
எட்டயபுரம் 8.1 மி.மீ
விளாத்திகுளம் 26 மி.மீ
காடல்குடி 7 மி.மீ
வைப்பார் 50 மி.மீ
சூரங்குடி 36 மி.மீ
ஓட்டப்பிடாரம் 40 மி.மீ
மணியாச்சி 20.5 மி.மீ
வேடநத்தம் 38 மி.மீ
கீழஅரசரஅடி 29 மி.மீ
என மொத்தம் 463 மில்லி மீட்டர் மழையும், சராசரியாக 24.37 மி.மீ மழையும் பொழிந்துள்ளது.