
தூத்துக்குடியில் கேந்திரிய வித்யாலயா பள்ளியை அமைப்பதற்கான இடத்தை தேர்வு செய்து, பணிகளை விரைவில் துவங்க வேண்டும் என வஉசி துறைமுக நிர்வாகத்திடம் பாஜக கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக தலைவர் ரா.சித்ராங்கதன் வெளியிட்ட அறிக்கை:
தூத்துக்குடி மாவட்டத்தைச் சார்ந்த குழந்தைகளின் கல்வி தரத்தை மேம்படுத்த வேண்டும் என்பதற்காகவும், மாணவர்கள் மற்றும் அவர்தம் பெற்றோர்கள் மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளை பெரிதும் எதிர்பார்க்கின்றனர். இந்த பள்ளிகள் மாணவர்களுக்கு உயர்தர கல்வியை மிகச் சிறப்பாக வழங்குவதில் முன்னிலை வகித்து வருகிறது. இதனால், நமது தூத்துக்குடி மாவட்டத்தில் உயர்தரத்திலான கல்வியை மாணவர்களுக்கு வழங்குவதற்கு கேந்திரிய வித்யாலயா பள்ளி அமைய வேண்டும் என்பது அனைவரின் விருப்பமாகும்.
தூத்துக்குடி மாவட்டத்தில் மத்திய அரசின்கீழ் செயல்பட்டுவரும் வ.உ.சி. துறைமுகம், கனநீர் ஆலை, சிர்கோனியம் ஆலை, வருமான வரி துறை, தொழிற்பாதுகாப்பு படை, உப்பு இலாக்கா, இரயில்வே துறை, சுங்கத்துறை, மீன்வளத்துறை நிறுவனங்கள், விமான நிலையம், பி.எஸ்.என்.எல், உணவு பாதுகாப்பு துறை, எல்.ஐ.சி. உள்ளிட்ட காப்பீட்டு நிறுவனங்கள், தேசிய நெடுஞ்சாலை துறை, தேசிய வங்கிகள், அஞ்சல் துறை உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றது. இந்த மத்திய அரசு நிறுவனங்களில் நாட்டின் பல்வேறு பகுதியைச் சார்ந்தவர்கள் மற்றும் தமிழகத்தின் பிற மாவட்டத்தைச் சார்ந்தவர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
இவ்வாறு மத்திய அரசின் துறைகளில் பணியாற்றும் ஊழியர்கள் பணி மாறுதல் காரணமாக தூத்துக்குடி மாவட்டத்திற்கு வரும்போது அவர்களின் குழந்தைகளுக்கு தூத்துக்குடி மாவட்டத்தில் மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளி இல்லாத காரணத்தினால் குழந்தைகளுக்கு ஒரே பாடத் திட்டத்திலான கல்வி பயில வாய்ப்பு கிடைப்பதில்லை. இதனால் இந்த குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகிறது.
இதை தடுக்கும் விதமாகவும் தூத்துக்குடி மாவட்டத்தைச் சார்ந்த மாணவர்களின் நலன்கருதியும், தூத்துக்குடி மாவட்டத்திற்கு கேந்திர வித்யாலயா பள்ளியை கொண்டுவர வேண்டும் என்று தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக மாநிலத்தலைவர் மு.அண்ணாமலை அவர்களிடம் விடுத்திருந்தோம். எங்களது கோரிக்கை ஏற்று தலைவர் மாநிலத்தலைவர் மத்திய அரசை வலியுறுத்தி இருந்த நிலையில், அதன் அடிப்படையில் பள்ளியை அமைப்பதற்கான ஆயத்த பணிகளை மத்திய அரசு துவங்கி உள்ளது.
அதன் ஒரு பகுதியாக கேந்திர வித்யாலயா பள்ளி அமைவதற்கு தூத்துக்குடி வ.உ.சி துறைமுக பகுதியை தேர்வு செய்துள்ளது. இந்நிலையில் வஉசி துறைமுக சேர்மன் சுசாந்தகுமார் புரோகித் அவர்களை சந்தித்து கேந்திர வித்யாலயா பள்ளியை அமைப்பதற்கான இடத்தினை ஒதுக்கீடு செய்து விரைவில் பள்ளியை துவங்குவதற்கு உதவி செய்யும்படி கோரிக்கை விடுத்தோம் என தெரிவித்துள்ளார்.