
தூத்துக்குடி ரயில் நிலையத்தில் இருந்து வாஞ்சி மணியாச்சிக்கு செல்லும் இணைப்பு ரயில்கள் ஒரு மாத காலம் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், பயணிகள் பரிதவிக்கின்றனர். சென்னைக்கு பகல் நேரத்தில் ஒரு சிறப்பு ரயில் இயக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.
தூத்துக்குடி ரயில் நிலைய யார்டில் மழைக்காலங்களில் அடிக்கடி தண்ணீர் தேங்கி விடுகிறது. இதை தடுக்கும் வகையில் அங்கு பொறியியல் பிரிவு சார்பில் பணிகள் நடந்து வருகின்றன. இதையொட்டி வாஞ்சி மணியாச்சியில் இருந்து இரவு 9.05 மணிக்கு தூத்துக் குடிக்கு இயக்கப்படும் பாசஞ்சர் ரயில் (எண்.56724) வரும் ஏப்ரல் 4ஆம் தேதி வரை முற்றிலுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. மறுமார்க்கமாக தூத்துக்குடியில் இருந்து இரவு 10.35 மணிக்கு புறப்படும் வாஞ்சி மணி யாச்சி பாசஞ்சர் ரயிலும் (எண்.56725) முற்றிலுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதேபோல் வாஞ்சி மணியாச்சியில் இருந்து அதிகாலை 3 மணிக்கு தூத்துக்குடி புறப்பட்டு செல்லும் ரயில் (எண்.56726), தூத்துக்குடியில் இருந்து காலை 8.30 மணிக்கு புறப்பட்டு வாஞ்சி மணியாச்சி செல்லும் ரயில் (எண்.56723) ஆகிய ரயில்களும் ஏப்ரல் 5ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளன.
நாகர்கோவில் - கோவை, குருவாயூர் ரயில்களுக்கு இணைப்பு ரயில்களாக சென்ற இந்த ரயில்கள் ரத்து காரணமாக பயணிகள் பரிதவிக்கின்றனர். இரவு நேரங்களில் வாஞ்சி மணியாச்சியில் இறங்கி, தூத்துக்குடி செல்ல போதிய போக்குவரத்து வசதிகள் இன்றி தவிக்கின்றனர். அதே போல், தூத்துக்குடியில் இருந்து ரயில்களை குறிப்பிட்ட நேரத்தில் வாஞ்சி மணியாச்சி சென்று பிடிப்பதிலும் சிக்கல்கள் உள்ளன. குறிப்பாக முன்பதிவு செய்த பயணிகள் திண்டாடி வருகின்றனர்.
எனவே ஏப்ரல் மாதம் 7ஆம் தேதி வரை தூத்துக்குடி மாவட்ட பயணிகளின் நலன் கருதி தூத்துக்குடி - சென்னை இடையே ஒரு சிறப்பு ரயில் இயக்கிட வேண்டும் என பயணிகள் எதிர்பார்க்கின்றனர். பணிகள் நடக்கும் நேரம் தவிர்த்து, மற்ற நேரங்களில் தூத்துக்குடியில் இருந்து அந்த ரயில் புறப்பட்டு செல்ல வழிவகை செய்திட வேண்டும்.
இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட பயணிகள் சங்க செயலாளர் பிரம்மநாயகம் கூறுகையில்:-
தூத்துக்குடி - வாஞ்சி மணியாச்சி இடையே ஒரு மாத காலம் இணைப்பு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதுவரை குறைந்தபட்சம் தூத்துக்குடியில் இருந்து மதுரை வரை பாசஞ்சர் ரயில்களை இயக்கினால் பயணிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும். மேலும் வாரம் இருமுறை இயக்கப்படும் தூத்துக்குடி மேட்டுப்பாளையம் ரயில் பெட்டிகள், 3 தினங்கள் தூத்துக்குடி ரயில் நிலையத்தில் வெறுமனே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அந்த ரயில் பெட்டிகளை கொண்டு கூடுதலாக ஒரு சேவை இயக்கினால் பயணிகளுக்கு தாராளமாக இணைப்பு ரயில் வசதிகள் கிடைக்கும் என்றார்.