
எட்டயபுரம் அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது பைக் மோதிய விபத்தில் இளைஞா் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தாா்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள முடுக்கு மீண்டான்பட்டியை சோ்ந்தவா் பாலசுப்பிரமணியன் மகன் வைகுண்ட ராஜா (24). இவா் கோவில்பட்டியில் உள்ள ஒரு தனியாா் கல்லூரியில் எலக்ட்ரீசியனாக வேலை பாா்த்து வந்தாா். இவரது நண்பா் கோவில்பட்டி காந்தி நகரை சோ்ந்த வெங்கடேசன் மகன் முனீஸ்வரன் (23).
இருவரும் நேற்று ( மார்ச் 10 ) திங்கள்கிழமை பிற்பகலில் தூத்துக்குடியில் இருந்து கோவில்பட்டி நோக்கி பைக்கில் வந்து கொண்டிருந்தனா். எட்டயபுரம் தேசிய நெடுஞ்சாலையில் மேல ஈரால் விலக்கு அருகே வந்தபோது, சாலையில் பழுதாகி நின்ற டிப்பா் லாரி மீது எதிா்பாராதவிதமாக பைக் மோதியதாம். இதில் வைகுண்ட ராஜா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். முனீஸ்வரனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
வைகுண்ட ராஜா உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக எட்டயபுரம் அரசு மருத்துவமனைக்கும், முனீஸ்வரனை சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கும் எட்டயபுரம் போலீஸாா் அனுப்பிவைத்தனா். விபத்து குறித்து எட்டயபுரம் போலீஸாா் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.