
தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அதன்படி, தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை, புதுக்கோட்டை, நாகை, ராமநாதபுரம், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், குறிப்பாக நான்கு மாவட்டங்களில் 12 முதல் 20 சென்டிமீட்டர் வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் ஆரஞ்சு அலட் விடுக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் மற்றும் தாமிரபரணி ஆற்றின் நீர்பிடிப்பு மாவட்டங்களான திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வுத்துறையின் சென்னை மண்டல மையத்தால் 11.03.2025 மற்றும் 12.03.2025 ஆகிய நாட்களில் மிக கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆகவே, தூத்துக்குடி மாவட்டம், மருதூர் மற்றும் ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டு பகுதிகள், கலியாவூர் முதல் புன்னக்காயல் வரையிலான தாமிரபரணி ஆற்றங்கரையோர கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள், கோரம்பள்ளம் ஆறு மற்றும் அணைக்கட்டு பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் ஆற்றில் குளிக்கவோ ஆற்றின் கரையோர பகுதிகளுக்கு செல்லாமலோ பாதுகாப்பாக இருக்கும் படியும், மாவட்டத்தின் மழை நீர் தேங்க கூடிய பிற தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களும் பாதுகாப்பாக இருக்கும் படியும், மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கப்படுகிறார்கள்.
மேலும், மருதூர் அணைக்கட்டு, ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டு, கோரம்பள்ளம் அணைக்கட்டு, உப்பாறு ஓடை, உப்பாத்து ஓடை மற்றும் அனைத்து நீர் நிலைகளையும் உன்னிப்பாக கண்காணித்து உரிய நடவடிக்கை உடனுக்குடன் மேற்கொள்ள அனைத்து நிலை அலுவலர்களுக்கும் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்கள்.
மேலும், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கனமழை தொடர்பான பாதிப்புகள் மற்றும் புகார்கள் தெரிவிக்க 24 மணி நேரமும் இயங்கும் அவசர கட்டுப்பாட்டு அறை எண்களில் தொடர்புகொள்ளலாம்.
கட்டணமில்லா அலைபேசி எண் - 1077,
தொலைபேசி எண் - 0461-234101,
அலைபேசி எண் - 9486454714, 9384056221 ஆகிய எண்களில் தெரிவிக்கலாம். என மாவட்ட ஆட்சித்தலைவர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.
கடந்த 10.3.25 காலை 6.30 மணி முதல் 11.3.25 காலை 6.30 மணி வரை தூத்துக்குடியில் 7 மி.மீ, சூரங்குடியில் 3 மி.மீ என மாவட்டம் முழுவதும் மொத்தம் 10 மி.மீ மழை பொழிந்துள்ளது. தொடந்து இன்று ( மார்ச் 11 ) காலை முதலே தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் கருமேகங்கள் சூழ்ந்து கன மழைக்கான எச்சரிக்கையோடு மிதமான அளவில் மழை பெய்ய தொடங்கியுள்ளது.
இந்நிலையில், கனமழை எச்சரிக்கை காரணமாக பொதுமக்கள் மழை பெய்யும் நேரங்களில் பழைய மற்றும் சிதிலமடைந்த கட்டிடங்களிலோ மரத்தின் அருகிலோ செல்ல வேண்டாம். தண்ணீர் தேங்கிய இடங்களில் பொதுமக்கள் இறங்க வேண்டாம். பழுதுபட்ட பாலங்கள், கட்டிடங்கள், மரங்கள் குறித்து எச்சரிக்கையாக இருக்கவும். அரசு தெரிவிக்கும் வழிகாட்டுதல்களை முறையாக பின்பற்றுங்கள்.