
தூத்துக்குடியில் மத்திய கல்விதுறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் மற்றும் பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை உருவப்படத்தை அவமரியாதை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக கோரிக்கை விடுத்துள்ளது.
பாரதிய ஜனதா கட்சி தூத்துக்குடி தெற்கு மாவட்ட துணைத் தலைவர் சிவராமன் மற்றும் பாஜகவினர் மத்தியபாகம் காவல் நிலைய ஆய்வாளருக்கு அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-
"இன்று பழைய பேருந்து நிலையம் பாலவிநாயகர் திருக்கோவில் முன்பு திமுக நடத்திய கண்டன ஆர்பாட்டத்தில் கலந்து கொண்ட நிர்வாகிகள் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை பெயருக்கும் புகழுக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் அவர்களுக்கு அவமரியாதை ஏற்படுத்த வேண்டும் என்ற கெட்ட எண்ணத்தில் திட்டமிட்டு இருதரப்பினரிடையே கலவரத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் கோசங்களை எழுப்பியும் சமூகத்தில் பதட்டத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற தீய நோக்கத்தோடு கூட்டுசதி செய்து அவர்களது உருவ படங்களை செருப்பால் அடித்து கிழித்து எச்சிலால் உமிழ்ந்து அவமரியாதை செய்துள்ளனர். இந்த வீடியோவை சமூக வலைதளத்தில் பார்த்ததும் எனக்கு மிகுந்த மனஉழைச்சலும் மனவேதனையும் ஏற்பட்டது.
இந்த வீடியோவில் உள்ள திமுக மாநகர செயலாளர் எஸ்.ஆர் ஆனந்தசேகரன் மாநில மீனவர் அணி துணை அமைப்பாளர் ப்ளோரன்ஸ், மாவட்ட அவைத் தலைவர் செல்வராஜ், மாவட்ட மருத்துவர் அணி தலைவர் அருண்குமார், மாவட்ட மகளிர் அணி செயலாளர் கவிதா தேவி, முன்னாள் மேயர் கஸ்தூரி தங்கம், பகுதி செயலாளர் ஜெயக்குமார், ரவிக்குமார், மாநகர சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் மகேஸ்வர சிங், வட்டச் செயலாளர்கள் பாலசுப்பிரமணியன், செல்வராஜ் உள்ளிட்ட அனைவரின் மீதும்,
அதேபோல் அரசியல் அமைப்பு சட்டத்தின் படி உறுதி மொழிஎடுத்த மாமன்ற உறுப்பினர்கள், சுரேஷ்குமார், ராமகிருஷ்ணன், மாநகராட்சி துணைமேயர் ஜெனிட்டா செல்வராஜ் மீது அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிராக செயல்பட்டு அரசியல் அமைப்பு சட்டத்தை அவமதித்த குற்றத்திற்காகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
இதில், பாஜக நிர்வாகிகள் விவேகம் ரமேஷ், சத்தியசீலன், சிவராமன், வாரியார், தங்கம், சண்முகசுந்தரம், சுரேஷ் குமார், சின்னதம்பி பாண்டியன், முருகன், சங்கர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்