
இன்று நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2 ஆம் கட்டம் தொடங்கி நடந்து வருகிறது. இதில், புதிய கல்வி கொள்கை விவகாரத்தை திமுக எம்பிக்கள் தொடர்ந்து எழுப்பினர்.
புதிய கல்விக் கொள்கை தொடர்பாக திமுக எம்பிக்கள் முதலில் சில கருத்துகளைத் தெரிவித்தனர். அதற்குப் பதிலளித்த கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், யார் அந்த சூப்பர் முதல்வர் என்பதைக் கனிமொழி எம்பி சொல்ல வேண்டும். தேசிய கல்விக் கொள்கை விவகாரத்தில் மாணவர்களைத் தமிழக அரசு தவறாக வழிநடத்துகிறது.
தமிழ்நாட்டு மாணவர்களின் எதிர்காலத்தை மாநில அரசு பாழடித்து வருகிறது. தமிழக எம்.பி.க்கள் நாகரீகமற்றவர்கள், ஜனநாயக விரோதமானவர்கள்.
பிஎம்ஸ்ரீ திட்டத்தில் தமிழகம் இணைய விருப்பம் தெரிவித்தது, கடைசியில் யூடர்ன் அடித்துவிட்டது. கடந்த ஆண்டு மார்ச் 15ம் தேதி இந்த திட்டத்தில் தமிழ்நாடு அரசு கையெழுத்திட இருந்தது. திட்டத்தை ஏற்க ஒப்புக்கொண்டுவிட்டு சூப்பர் முதல்வரின் ஆலோசனையில் பின்வாங்கியது என்று கூறியிருந்தார். இது நாடாளுமன்றத்தில் பெரும் பரபரப்பைக் கிளப்பியது.
இதற்கு திமுக எம்.பி.க்கள் கடும் கண்டனத்தை பதிவு செய்தனர். இதனையடுத்து, தமிழ்நாட்டு எம்.பி.க்கள் நாகரீகமற்றவர்கள் என்று பேசியதை திரும்பப் பெற்றுக்கொள்வதாக மக்களவையில் அமைச்சர் தர்மேந்திர பிரதான் எம்.பி. கனிமொழியிடம் தெரிவித்தார்
தர்மேந்திர பிரதானின் பேச்சைக் கண்டித்து நாடாளுமன்றத்தில் திமுக எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து நாடாளுமன்றம் சற்று நேரம் ஒத்திவைக்கப்பட்டது. அப்போது நாடாளுமன்ற வளாகத்திலும் திமுக எம்பிக்கள் போராட்டம் நடத்தினர். மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்பிக்கள் போராட்டம் நடத்தினர்.
இந்த நிலையில், பாராளுமன்ற கூட்டத்தொடரில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தமிழ்நாட்டு மக்களை அவதூறாக பேசியதை கண்டித்து தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் தூத்துக்குடி அண்ணா பேருந்து நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாநகர திமுக செயலாளர் ஆனந்த சேகரன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான திமுகவினர் கலந்து கொண்டு மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான கண்டித்து முழக்கங்கள் எழுப்பியதோடு, தர்மேந்திர பிரதான் மற்றும் பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோரின் உருவப்படத்தை கிழித்தும் செருப்பால் அடித்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் தமிழ்நாட்டு மக்களை அவதூறாக பேசிய தர்மேந்திர பிரதான் உடனடியாக பதவி விலக வேண்டும் என்றும் தமிழ்நாட்டு மக்களை தொடர்ந்து வஞ்சிக்கும் மோடி அரசை கண்டித்தும் முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்தில், மாநில மீனவர் அணி துணை அமைப்பாளர் ப்ளோரன்ஸ், மாநகராட்சி துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ், மாவட்ட அவைத் தலைவர் செல்வராஜ், மாவட்ட மருத்துவர் அணி தலைவர் அருண்குமார், மாவட்ட மகளிர் அணி செயலாளர் கவிதா தேவி, முன்னாள் மேயர் கஸ்தூரி தங்கம், பகுதி செயலாளர் ராமகிருஷ்ணன், ஜெயக்குமார், சுரேஷ்குமார், ரவிக்குமார், மாநகர சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் மகேஸ்வர சிங் உள்பட பலர் கலந்து கொண்டனர்.