
தமிழ்நாட்டில் நாளை ( மார்ச் 11 ) ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
பூமத்திய ரேகையொட்டிய வடகிழக்கு இந்திய பெருங்கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதாகவும், இதன் காரணமாக தமிழகத்தில் கடலோர மற்றும் உள் மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
மேலும், கன்னியாகுமரி, தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் நாளை ( மார்ச் 11 ) மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. ஆரஞ்சு எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
மேலும், விருதுநகர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, சிவகங்கை, திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம் பகுதிகளிலும், காரைக்கால் பகுதியிலும் நாளை கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
இந்திய வானிலை ஆய்வுத்துறை வெளியிடும் எச்சரிக்கை அறிவிப்புகள் அனைத்தும் குறிப்பிட்ட சில நிறங்களை அடையாளமாகக் கொண்டு வெளியாகின்றன. இந்த நிறங்களைக் கொண்டு எச்சரிக்கை அறிவிப்பின் தன்மையினை நாம் அறிந்து கொள்ள முடியும்.
ஆரஞ்சு எச்சரிக்கை மழையினை பெரு மழை அல்லது மிகக் கனமழை (Very Heavy Rainfall) என்கின்றனர். இப்பெரு மழையினால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படக்கூடிய வாய்ப்பிருக்கிறது என்று அறிந்து கொள்ளலாம். எனவே, எச்சரிக்கையுடன் தயார் நிலையில் இருக்க வேண்டும்.