
தூத்துக்குடி விமான நிலையத்தில் கூடுதல் விமானங்கள் வந்திறங்கும் வகையில், ரூ.227.33 கோடி மதிப்பில் சுமாா் 17,341 சதுர மீட்டரில் புதிய முனையம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இதில், விமானப் போக்குவரத்து கண்காணிப்பு, கட்டுப்பாட்டு கோபுரம், தீயணைப்புத் துறை கட்டடங்கள் உள்ளிட்டவை கட்டும் பணி நடைபெற்று வருகிறது. குறிப்பாக, ஒரே நேரத்தில் 5 விமானங்களை நிறுத்தும் வகையிலான வசதிகள், 500 பயணியா் வாகனங்கள் நிறுத்துவதற்கான வசதிகள், 2 விஐபி அறைகள், ஒரு மணி நேரத்திற்கு 1,440 பயணியரை கையாளும் வகையிலான வசதிகள் உள்ளிட்ட அதிநவீன வசதிகளுடன் உள்கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேலும், புதிய முனையத்தில் ரூ.113.63 கோடி மதிப்பீட்டில் 3,115 மீட்டா் நீளத்திற்கு விமான ஓடுதளம் அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. இதனால், மிகப்பெரிய ஏ - 321 ரக ஏா்பஸ் விமானங்கள் வந்து செல்ல முடியும்.
இந்தநிலையில், சென்னையில் இருந்து தூத்துக்குடி, திருச்சி விமான நிலையங்களுக்கு கூடுதல் விமானங்கள் இயக்கப்படும் என்று விமானப் போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது.
சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடி, திருச்சி உள்ளிட்ட விமான நிலையங்களுக்குச் செல்லும் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றது
தற்போது, சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு இரு வழித்தடங்களில் நாள்தோறும் 8 விமான சேவைகளும், திருச்சிக்கு 14 விமான சேவைகளும் இயக்கப்படுகிறது.
இந்த நிலையில், சென்னை - தூத்துக்குடி இடையே 12 சேவையாகவும், சென்னை - திருச்சி இடையே 22 சேவையாகவும் அதிகரிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. வருகின்ற மார்ச் 30ஆம் தேதி முதல் விமான சேவை அதிகரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.