
மதுரையில் இருந்து தூத்துக்குடி செல்லும் தேசிய நெடுஞ்சாலையை 130 கோடி ரூபாய் செலவில் புதுப்பிக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.
இதற்காக, விருதுநகர் மாவட்ட எல்லையான ஆவியூரில் இருந்து பந்தல்குடி வரை, சாலையில் தடுப்புகள் வைக்கப்பட்டு ஒருவழிப் பாதையாக மாற்றப்பட்டுள்ளது. சாலை புதுப்பிக்கப்பட்டு, சென்டர் மீடியனும் உயர்த்தப்பட்டால் விபத்துக்கள் குறையும் எனக் கூறப்படுகிறது.
மதுரை – தூத்துக்குடி நான்கு வழிசாலை எப்போதும் பரபரப்பாக காணப்படும் சாலை. தூத்துக்குடியிலிருந்து வடதமிழகத்திற்கு செல்லும் பெரும்பாலான வாகனங்கள் மதுரையை கடந்து தான் செல்ல வேண்டும். மேலும், தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்தும் பெரும்பாலான லாரிகள் மதுரை வழியாகத்தான் பல்வேறு மாவட்டங்களுக்கும் செல்கின்றன.
லாரிகள் போக்குவரத்து அதிகமாக இருப்பதால் சாலையில் தரமும் கேள்வி குறியாகியுள்ளது. ஆங்காங்கே சாலைகள் மேடு, பள்ளமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இதனால், மதுரை – தூத்துக்குடி நான்கு வழிச்சாலை அருகே விபத்துகளும் அடிக்கடி நடந்த வண்ணம் இருக்கின்றன.
காரியாப்பட்டி, விருதுநகர், அருப்புக்கோட்டை செல்லும் வாகனங்களும் இந்த சாலையைத்தான் பயன்படுத்த வேண்டிய உள்ளதால், அன்றாடம் வேலைக்கு சென்று வருபவர்கள் மிகுந்த சிரமத்தை எதிர்கொள்கின்றனர்.
காரியாபட்டி அருகே வக்கனாங்குண்டு பகுதியில் தொடங்கி அருப்புக் கோட்டை அருகே பந்தல்குடி வரை சாலை பராமரிப்புப் பணிகள் கடந்த ஒரு மாதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ரூ.130 கோடி செலவில் இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சாலை சீரமைப்பு பணிக்காக ஏற்கெனவே இருந்த தார் சாலைகள் சுரண்டி எடுக்கப்பட்டுள்ளது. சாலையில் உள்ள தூசுகள், துகள்கள் கம்பிரசர் இயந்திரங்களைக் கொண்டு அகற்றப்படுகின்றன.
இதையடுத்து விருதுநகர் மாவட்ட எல்லையான ஆவியூரில் இருந்து பந்தல்குடி வரை, சாலையில் தடுப்புகள் வைக்கப்பட்டு ஒருவழிப் பாதையாக மாற்றப்பட்டுள்ளது.