
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அரியநாயகிபுரம் கிராமத்தில் வசித்து வரும் 17 வயதுடைய சிறுவன், திருநெல்வேலியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் பதினோராம் வகுப்பு படித்து வருகிறார்.
இதனிடையே, இன்று சிறுவன் வழக்கம்போல, பேருந்து ஒன்றில் ஏறி திருநெல்வேலி நோக்கி சென்று கொண்டு இருந்தார். அரியாயகிபுரத்தை அடுத்த கெட்டியம்மாள்புரம் கிராமத்தில் பேருந்து 3 பேர் கும்பலால் இடைமறிக்கப்பட்டது.
பேருந்துக்குள் ஏறிய கும்பல் மாணவனை பேருந்தில் இருந்து கீழே தள்ளி, அவரை சரமாரியாக வெட்டியது. இந்த சம்பவத்தில் மாணவனின் முகம், தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த பயணிகள் கும்பலை தடுக்க முற்பட்டதால், அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர்.
தகவல் அறிந்து வந்த ஸ்ரீவைகுண்டம் காவல்துறையினர், சிறுவனை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சிறுவன் திருநெல்வேலி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து அதிகாரிகள் நடத்திய முதல்கட்ட விசாரணையில், சிறுவன் மீது கபடி விளையாட்டில் ஏற்பட்ட விரோதம் தொடர்பாக கொலை முயற்சி சம்பவம் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. தொடர்ந்து காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், பாதுகாப்பு கருதி கூடுதல் காவல்துறையினர் அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர்.
காலையிலேயே பள்ளி மாணவன் மீது ஆயுதத்தால் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தூத்துக்குடி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.