
அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூருக்கு ஆண்டு தோறும் மார்கழி மற்றும் தை, மாசி மாதங்களில், திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி, விருதுநகர், ராமநாதபுரம் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான ஆண், பெண், பக்தர்கள், சிறுவர், சிறுமியர் குடும்பத்துடனும், குழுவாகவும் திருச்செந்தூருக்குப் பாதயாத்திரையாகச் செல்கின்றனர்.
முருகப் பெருமானின் திருவுருவச் சிலை, திருவுருவப் படத்தை மலர்களால் சப்பரம் போல அலங்கரித்து கார், வேன், டிராக்டர்களில் எடுத்துச் செல்கின்றார்கள். இந்த வாகனங்களில் முருகப் பெருமானின் பக்திப்பாடல்களை ஒலிக்கச் செய்து, அதைக் கேட்டபடியே கை தட்டியும், நடனமாடியும் பக்தர்கள் பின்னே நடந்து செல்கிறார்கள்.
அவ்வாறு செல்லும் பக்தர்கள், சாலையில் நடந்து செல்லும் போது இடது புறமாகவேச் செல்வதால், அதே சாலையைப் பயன்படுத்தும் இரண்டு சக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள், பேருந்துகள், கனரக வாகனங்கள் ஆகியவை எப்போதும் மோட்டார் வாகனச் சட்டத்தின்படி இடது புறமாகவே வாகனத்தை இயக்க வேண்டும் என்பதால், அதே இடது புற சாலையில் பக்தர்கள் குழுக்களாக நடந்து வரும் போது வாகனங்கள் பக்தர்கள் மீது மோத வாய்ப்புள்ளது.
இரவு நேரங்களில் பாதயாத்திரையாகச் செல்லும் பக்தர்கள் வாகனங்களுக்கு அடையாளம் காட்டும் வகையிலும் விபத்தினைத் தடுக்கும் வகையிலும் முதுகு, கைப் பகுதிகளில் ஒளிரும் ஸ்டிக்கர்களை பல பாதயாத்திரை பக்தர்கள் ஒட்டாமல் மிகவும் அலட்சியமாக செல்கின்றனர். இதனால், அவ்வப்போது விபத்து ஏற்படும் சூழல் ஏற்படுகிறது.
மேலும், இது போன்ற விபத்துகளைத் தவிர்க்கும் வகையில் மோட்டார் வாகனச் சட்டம், சாலை விதிகள் மற்றும் வழிமுறைகள் சட்டத்தின்படி பாதசாரிகள் எப்போதும் சாலையின் வலது புறமாகவே நடந்து செல்ல அறிவுறுத்தப்படுகிறார்கள். அப்போது தான் எதிரே இடதுபுறமாக வரும் வாகனங்களைக் கண்டு கொண்டு விபத்து ஏற்படாதபடி பக்தர்கள் தங்களைக் காத்துக் கொள்வதோடு, மற்ற வாகனங்களுக்கும் இடையூறு இல்லாமல் பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ள இயலும். இது சம்மந்தமாக சாலையின் வழிநெடுகிலும் அறிவிப்புப்பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. பாதாயாத்திரையாக வரும் பக்தர்கள், எப்போதும் சாலையின் வலதுபுறமாகவே நடந்து சென்று தங்களின் பாதயாத்திரை வேண்டுதலைப் பாதுகாப்பான முறையில் நிறைவு செய்ய வேண்டும் என தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது. ஆனால் பெரும்பாலான பக்தர்கள் அதற்கு செவி சாய்ப்பதில்லை. இதனால் பாதயாத்திரை பக்தர்கள் மீது வாகனம் மோதி விபத்து என்ற சோகச் செய்தி அவ்வப்போது கேட்டுக்கொண்டே இருக்கிறது.
ஆகவே தயது செய்து இரவு நேரங்களில் பாதயாத்திரையாகச் செல்லும் பக்தர்கள் வாகனங்களுக்கு அடையாளம் காட்டும் வகையிலும் விபத்தினைத் தடுக்கும் வகையிலும் முதுகு, கைப் பகுதிகளில் ஒளிரும் ஸ்டிக்கர்களை மறக்காமல் ஒட்டிச் சென்று பாதுகாப்பான ஆன்மீக பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என பல்வேறு தரப்பினரும் விரும்புகின்றனர்.