
தூத்துக்குடி மாவட்டத்தில் அணுக்கழிவு கொட்டுவதாக தவறான வதந்தி பரப்புவர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் அணுக்கழிவு கொட்டப்படுவதாக சிலர் தவறான வதந்திகளை பரப்பி வருகின்றனர். மேலும் இது சம்பந்தமாக பொதுமக்களை ஒன்று திரட்டி பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் விதமாகவும் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையிலும் சிலர் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதாக தகவல் தெரிய வருகிறது.
ஆனால், தூத்துக்குடி மாவட்டத்தில் எந்த ஒரு அணு நிலையமும் செயல்படவில்லை. அணுக்கழிவும் வெளியேற்றப்படவில்லை. மேலும் அணுக்கழிவை கொட்டுவதற்காக தூத்துக்குடி மாவட்டத்தில் எங்கேயும் அதற்கென தனியாக இடமில்லை. எனவே பொதுமக்களுக்கு அச்சத்தையும் பீதியையும் ஏற்படுத்தும் வகையில் இது போன்ற வதந்திகளை பரப்ப வேண்டாம் எனவும், மேலும் தவறான தகவலை பரப்புவோர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொதுமக்கள் நலன் கருதி தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக தெரிவித்துக்கொள்ளப்படுகிறது. என மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.