
தூத்துக்குடி மாவட்டத்தில் கடன் செயலியில் எடுக்கப்பட்ட பணத்திற்கான கடனை அடைத்த பிறகும் மீண்டும் பணம் செலுத்துமாறு குடும்பத்தினரின் புகைப்படங்களை மார்பிங் செய்து மிரட்டிய நபரை கைது செய்து சைபர் குற்ற பிரிவு போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர்.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் பகுதியைச் சேர்ந்த ஒருவர் இணையதளத்தில் கிடைத்த கடன் செயலியின் மூலம் கடன் பெற்று அந்த கடனை அடைத்த பிறகும், அந்த செயலியின் உரிமையாளர் மேற்படி புகார்தாரரை தொடர்புகொண்டு மீண்டும் பணம் கட்ட வேண்டும், அவ்வாறு கட்டவில்லை என்றால் அவரது குடும்பத்தினரின் புகைப்படங்களை மார்பிங் செய்து சமூக வலைதளங்களில் பரப்பி விடுவேன் என்று மிரட்டியுள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட நபர் அளித்த புகாரின் பேரில் சைபர் குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் உத்தரவின்படி சைபர் குற்றப்பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் சகாய ஜோஸ் மேற்பார்வையில் சைபர் குற்ற பிரிவு காவல் ஆய்வாளர் சாந்தி தலைமையிலான சைபர் குற்றப்பிரிவு போலீசார், பாதிக்கப்பட்ட நபருக்கு தொடர்பு கொண்ட வாட்ஸ்அப் எண்ணின் IP முகவரியின் அடிப்படையில் தொழில்நுட்ப ரீதியாக விசாரணை மேற்கொண்டதில், தெற்கு டெல்லி, அயா நகரைச் சேர்ந்த சந்தேஷ்வர் மகன் தேவ்ஆனந்த் (20) என்பவர் என்பது தெரியவந்தது.
இதனையடுத்து சைபர் குற்றப்பிரிவு போலீசார் கடந்த 03.03.2025 அன்று தெற்கு டெல்லி சென்று தேவ்ஆனந்தை கைது செய்து நேற்று (07.03.2025) தூத்துக்குடி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இதுகுறித்து சைபர் குற்றப்பிரிவு போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.