
எட்டயபுரம் காவல் நிலைய எல்கைக்குட்பட்ட பகுதியில் தாய், மகள் கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு கொள்ளையடிக்கப்பட்ட நகை மற்றும் மீட்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் காவல் நிலைய எல்கைக்குட்பட்ட மேலநம்பிபுரம் கிராமத்தைச் சேர்ந்த தாய் சீதாலட்சுமி மற்றும் மகள் ராமஜெயந்தி ஆகிய இருவரையும் கடந்த 03.03.2025 அன்று அவர்களது வீட்டில் வைத்து மர்மநபர்கள் கொலை செய்துவிட்டு அவர்களிடமிருந்த தங்க நகைகள் மற்றும் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
இது தொடர்பாக தொடர்பாக எட்டயபுரம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் தலைமையில் 10 தனிப்படை காவல்துறையினர் தீவிர விசாரணையை காவல்துறையினர் மேற்கொண்டனர்.
மேலும் தொழில்நுட்ப மற்றும் தடய அறிவியல் நிபுணர்கள் அளித்த ஆதாரங்களின் அடிப்படையிலும், கிராமத்தினரிடமிருந்து கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையிலும் விசாரணை மேற்கொண்டதில் கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் மேலநம்பிபுரம் கிராமத்தை ஒட்டியுள்ள காட்டுப்பகுதியில் பதுங்கியுள்ளதாக கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில், அவர்களை சுற்றிவளைத்து மடக்கிப் பிடிக்க காவல்துறையினர் திவீர தேடுதல் வேட்டையில் இறங்கினர்.
மேலும், இச்சம்பவம் குறித்து தென்மண்டல காவல்துறை தலைவர் மற்றும் திருநெல்வேலி சரக காவல் ஆணையரின் நேரடி மேற்பார்வையின் கீழ் தூத்துக்குடி மற்றும் அருகில் உள்ள மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 250க்கும் மேற்பட்ட காவல்துறையினர் மோப்பநாய் படைப் பிரிவு மற்றும் 6 ட்ரோன் கேமராக்கள் மூலம் வயல்வெளிகள் மற்றும் காட்டுப்பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக இரவும் பகலும் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இதன் காரணமாக கொலையில் சம்மந்தப்பட்டவர்கள் காட்டுப்பகுதியை விட்டு வெளியே வர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
இந்நிலையில் இன்று (06.03.2025) அதிகாலை 4.30 மணியளவில் கொலை வழக்கில் சம்மந்தப்பட்ட முக்கிய நபரான மேல நம்பிபுரம் பகுதியைச் சேர்ந்த எட்டுராஜ் மகன் முனீஸ்வரன்(24) என்பவரை எட்டையபுரம் காவல் நிலைய ஆய்வாளர் சுந்தரமூர்த்தி, உதவி ஆய்வாளர் முத்துராஜ், தலைமை காவலர் ஜாய்சன் நவதாஸ் உட்பட தனிப்படை காவல்துறையினர் கைது செய்து, அவர் குற்றத்தை ஒப்புக் கொண்டதையடுத்து, கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் மற்றும் பணத்தை புதைத்து வைத்த இடத்தில் இருந்து மீட்கும் நடவடிக்கையின் போது முனீஸ்வரன் தப்பிச்செல்லும் எண்ணத்தில் தனிப்படை காவல்துறையினரை அங்கிருந்த அரிவாளால் தாக்கிய போது, காவல்துறையினர் தற்காப்புக்காகவும், முனீஸ்வரன் தப்பி ஓடுவதை தடுக்கும் பொருட்டும் அவரது காலில் சுட்டுப்பிடித்து, அவரிடமிருந்து கொலை வழக்கில் திருடு போன 5 ¾ சவரன் தங்க நகைகள், பணம் ரூபாய் 20,000 ஐ மீட்கப்பட்டனர்.
இதற்கடையில் இந்த வழக்கின் மற்றொரு நபரான மேலநம்பிபுரத்தைச் சேர்ந்த அம்மாசி மகன் மகேஷ்கண்ணன் (28) என்பவரும் தப்பியோட முயற்சிக்கும் போது காவல்துறையினர் அவரை கைது செய்து அவரது வாக்குமூலத்தின் அடிப்படையில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகளில் மீதமுள்ள 4 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூபாய் 15,000 மீட்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்ட காவல்துறையின் விரைவான விசாரணை மற்றும் தொழில்நுட்ப நடவடிக்கையின் காரணமாக இந்த கொடுரமான குற்றத்தை செய்த குற்றவாளிகள் உடனடியாக பிடிக்கப்பட்டு கொள்ளையடிக்கப்பட்ட சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளன என தூத்துக்குடி மாவட்ட காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.