
இந்தியாவில் மைசூருக்கு அடுத்தபடியாக தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூருக்கு அருகிலுள்ள குலசேகரப்பட்டினத்தில்தான் தசரா திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும். இந்த தசரா திருவிழா உலகப் பிரசித்தி பெற்றது.
குலசை என்று அழைக்கப்படும் குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோயிலானது, தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரிலிருந்து கன்னியாகுமரி செல்லும் சாலையில் 13 கி.மீ தொலைவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தினசரி ஏராளனமாக பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
அதே போல, உடன்குடி அனல்நிலையத்திற்கு பணிக்கு சென்றுவருவோர், மணப்பாடு சுற்றுலா தளத்திற்கு செல்வோர், கன்னியாகுமரி செல்வோர் என பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் அதிகம் பயன்படுத்துக்கூடிய திருச்செந்தூரிலிருந்து கன்னியாகுமரி செல்லும் சாலையில், ஆலந்தலை முதல் குலசை வரையிலான சாலையில், சாலையோரம் ஆங்காங்கே வளர்ந்துள்ள சீமை கருவேல மரங்களின் கிளைகள், சாலை பக்கம் நீண்டு வளர்ந்துள்ளன.
இச்செடிகளில் உள்ள கூர்மையான முட்கள், சாலையோரமாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகளின் ஆடைகளை கிழிப்பதோடு, முகம், கண்களை பதம் பார்க்கும் நிலை உள்ளது. மேலும் முந்தி செல்ல விரும்பும் வாகனங்களுக்கு வழிவிடுவதற்காக ஓரமா ஒதுங்க முடியாத நிலை ஏற்படுகிறது. மேலும் எதிரே வரும் வாகனங்களும் தெரியாத அளவிற்கு சாலையோர முள்செடிகள் வளர்ந்துள்ளது.
எனவே, இருசக்கர வாகன ஓட்டிகளை காயப்படுத்தும் வகையில், சாலையோரம் நீண்டு வளர்ந்துள்ள சீமைகருவேல மரங்களை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.