பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வு சட்டமன்றத் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று தூத்துக்குடியில் சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் தெரிவித்தார்.
சமத்துவ மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டம் தூத்துக்குடி – திருநெல்வேலி சாலை மறவன்மடம் பகுதியில் நாளை காலை 9.30 மணிக்கு நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக சமத்துவ மக்கள் கட்சி நிறுவன தலைவர் சரத்குமார், கட்சியின் முதன்மை துணைப் பொதுச்செயலாளரும், மாநில மகளிர் அணி செயலாளருமான ராதிகா சரத்குமார் ஆகியோர் இன்று விமானம் மூலம் தூத்துக்குடி வந்தனர்.
அவர்களை மாநில துணைப்பொதுச்செயலாளர் சுந்தர் தலைமையில் மத்திய மாவட்ட செயலாளர் வில்சன், மாநில இளைஞரணி துணை செயலாளர் குரூஸ்திவாகர் உள்ளிட்டோர் வரவேற்றனர். இதில் மாநில பொருளாளர் சுந்தரேசன், கொள்கைபரப்பு செயலாளர் விவேகானந்தன், சென்னை மண்டல செயலாளர் மகாலிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பின்னர், சரத்குமார் செய்தியாளர்களிடம் பேசிய போது, ’’அதிமுகவுடன் தொடர்ந்து 10 ஆண்டுகாலம் பயணித்து வந்தோம். வருகின்ற சட்டமன்ற தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சியின் வாக்கு விகிதம் என்ன என்பதை தெரிந்து கொள்வதற்காக தனிச் சின்னத்தில் போட்டியிடுவது என முடிவு எடுக்கப்பட்டது.
அதன்பேரில் இம்முறை சமத்துவ மக்கள் கட்சி தனி சின்னத்தில் போட்டியிடுவதற்கான முயற்சியில் இறங்கியுள்ளது. தமிழகத்தில் நாங்கள் அமைக்கும் அணி வருகிற சட்டமன்ற தேர்தலில் கணிசமான இடங்களில் வெற்றி பெற்று யார் ஆட்சி அமைப்பார்கள் என்பதை தீர்மானிக்கும். பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வு கண்டிப்பாக வரும் சட்டமன்ற தேர்தலில் பிரதிபலிக்கும்.
ராதிகா சரத்குமார் மற்றும் கட்சித் தோழர்கள் தமிழகத்தில் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுவது என்பது குறித்த முக்கிய முடிவுகள் நாளை நடைபெறும் பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்படும்’’ என்றார்