
தூத்துக்குடி அருகே முன்விரோதம் காரணமாக கொத்தனாரை தாக்கி கொல்ல முயன்றதாக 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி லெவஞ்சிபுரம் 7வது தெருவைச் சேர்ந்தவர் பெரியநாயகம் மகன் சுடலையாண்டி (32). கொத்தனாராக வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு முள்ளக்காடு நேசமணி நகரை சேர்ந்த மரிய வின்சென்ட் மகன் ஸ்டாலின் என்பவரை முன்விரோதமாக தாக்கினாராம். இதனால் இருவருக்கும் இடையே முன் விரோதம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், நேற்றிரவு சுடலையாண்டி புதூர் பாண்டியாபுரம் பாலத்தின் அருகே உள்ள ஒரு டாஸ்மார்க் மதுபான கடையில் இருந்து வெளியே வந்த போது அங்கு வந்த ஸ்டாலினின் சகோதரர் அருள்ராஜ் உட்பட சிலர் அவரை சராமாரியாக தாக்கி கொல்ல முயன்றார்களாம். இதில் காயம் அடைந்த சுடலையாண்டி தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இது தொடர்பாக சுடலையாண்டி அளித்த புகாரின் பேரில், புதியம்புத்தூர் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து, முள்ளக்காடு நேசமணி நகரைச் சேர்ந்த மரிய வின்சென்ட் மகன் அருள்ராஜ் (36), மாரியப்பன் மகன் மாரி செல்வம் (24), பன்னீர்செல்வம் மகன்கள் திருமணி ஆனந்த் (27) கார்த்திக் (23) ஆகிய 4 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.