
சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடியவர் அய்யா வைகுண்டர். அவர் வழியை பின்பற்றும் மக்கள், அவரை சிவன் பிரம்மா விஷ்ணு ஆகிய மும்மூர்த்திகள் ஒருங்கிணைந்த அவதாரமாக கருதி வழிபட்டு வருகின்றனர். குறிப்பாக, தென் மாவட்டங்களை சேர்ந்த மக்கள் பெரும்பாலானோர் அவரை வழிபட்டு வருகின்றனர்.
அய்யா வைகுண்டரின் பிறந்த தினத்தன்று, அவரை வழிபடும் மக்கள், அந்தந்த பகுதிகளில் ஊர்வலம் செல்வது வழக்கம். அவரின் அவதார தினத்தைக் கொண்டாடும் வகையிலும், தென் மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுவது வழக்கம்.
அந்த வகையில், அய்யா வைகுண்டரின் 193 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நாளை ( மார்ச் 4ஆம் தேதி ) தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறையாக விடப்படுவதாக தூத்துக்கு மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் அறிவித்துள்ளார்.
எனினும், அத்தியாவசிய பணிகள் / பணியாளர்களுக்கு இவ்விடுப்பு பொருந்தாது என தெரிவிக்கப்படுகிறது. இது செலாவணி முறிச் சட்டத்தின்படி (Negotiable Instruments Act 1881) பொது விடுமுறை நாளல்ல எனத் தெரிவிக்கப்படுகிறது. இந்த விடுமுறைக்குப் பதிலாக 08.03.2025 இரண்டாம் சனிக்கிழமை அலுவலக நாளாக அறிவிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் இளம்பகவத், தெரிவித்துள்ளார்.