
எட்டயபுரம் அருகே வீட்டில் தாய் - மகள் இறந்து கிடந்த நிலையில், அவர்கள் அணிந்திருந்த நகைகளும் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் அருகே உள்ள மேலநம்பிபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பூவன். இவரது மனைவி சீத்தாலட்சுமி (65). இந்த தம்பதியின் மகள் ராமஜெயந்தி (48). பூவன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். தனது கணவர் விஷ்வாவுடன் ஏற்பட்ட தகராறில் கடந்த 3 ஆண்டுகளாக கணவரிடம் இருந்து பிரிந்த மகள் ராமஜெயந்தி தனது தாயாருடன் வசித்து வந்தார்.
இந்த நிலையில், இன்று மாலை சுமார் 4 மணி வரை இவர்களது வீட்டு கதவு திறக்கப்படவில்லை. இதனால் அக்கம் பக்கத்தில் சந்தேகம் அடைந்தவர்கள் எட்டயபுரம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். காவல் ஆய்வாளர் நவநீதகிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, பார்த்தபோது படுக்கை அறையில் தாய் - மகள் இருவரும் இறந்து கிடந்தனர்.
தாய் - மகள் இருவரையும் யாராவது கொலை செய்துவிட்டு, இருவரது கழுத்தில் அணிந்திருந்த சுமார் 10 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளரா ? அல்லது வேறு ஏதும் மரணத்திற்கு காரணமா ? போலீசார் பல்வேறு கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தகவல் அறிந்து தூத்துக்குடி மாவட்ட எஸ்பி அல்பர்ட் ஜான், விளாத்திகுளம் டிஎஸ்பி ராமச்சந்திரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
மேலும் தூத்துக்குடியில் இருந்து மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. கைரேகை நிபுணர்களும் சம்பவ இடத்திற்கு சென்று தடயங்களை சேகரித்தனர். 2 பேரின் உடல்கள் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.