
தூத்துக்குடி மாவட்ட பத்திரபதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி தலைமையிலான போலீசார் சோதனை நடத்தியதில் கணக்கில் வராத ரூ.3 லட்சத்து 63 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடி போல்பேட்டை பகுதியில் ஒருங்கிணைந்த பத்திரப்பதிவு அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த பத்திரப்பதிவு அலுவலகத்தில் பல்வேறு பத்திரப்பதிவுகளுக்கு பத்திரப்பதிவு அலுவலர்கள் பொதுமக்களிடமிருந்து லஞ்சம் பெறுவதாக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. இதைத்தொடர்ந்து கடந்த மாதம் லஞ்ச ஒழிப்புத் துறையினர் கீழூர் பத்திரபதிவு அலுவலகத்தில் சோதனை செய்து கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்தனர்.
இந்நிலையில், இன்று மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்வதற்காக பணம் கைமாற உள்ளதாக தூத்துக்குடி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி பீட்டர் பாலுக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து டிஎஸ்பி பீட்டர்பால் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார் பத்திரப்பதிவு அலுவலகத்தில் மூன்றாவது மாடியில் உள்ள மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் சோதனை செய்தனர். அப்போது அங்கு கணக்கில் வராத ரூபாய் 3,63,000 இருப்பதைக் கண்டு அந்த பணத்தை பறிமுதல் செய்தனர்.
மேலும் இந்த பணத்தை வைத்திருந்தது தொடர்பாக மாவட்ட பதிவாளர் தணிக்கை சதாசிவத்திடம் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். தூத்துக்குடி பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் அதிரடி சோதனை நடத்தி பணத்தை பறிமுதல் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.