
தொகுதி மறுசீரமைப்பு குறித்து ஒரு விவாதம் நடக்க வேண்டுமல்லவா, அந்த விவாதத்திற்கு கூட ஒரு சில கட்சிகள் வருவதற்கு தயக்கம் காட்டுகிறார்கள். பாஜகவும் அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்று அவர்களின் கருத்தை முன் வைக்க வேண்டும்.
தமிழ்நாட்டிற்கான நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைக்கப்படாது. ஆனால் உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் மக்கள் தொகை குறையவில்லை. மக்கள் தொகை அடிப்படையில் தொகுதிகள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டால், பீகார், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் எம்பி க்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
ஆனால் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட தென் மாநிலங்களுக்கு எம்பிக்கள் எண்ணிக்கை குறைக்கப்படவோ அல்லது அதே நிலை தொடரவோ வாய்ப்புகள் உள்ளது. மொத்தமாக உள்ள 543 எம்பி க்களில் தமிழ்நாட்டில் இருந்து தேர்வான எம்பிக்களின் சராசரி 7.18 சதவிகிதமாகும். ஒருவேளை தொகுதி மறுசீரமைப்பு செய்யப்பட்டால், அதன் சதவிகிதம் 5 ஆக குறைய வாய்ப்புகள் உள்ளது.
இதனால் தென் மாநிலங்களில் மிகப்பெரிய பாதிப்பை சந்திக்கும். இது தொடர்பான தெளிவான பதிலை உள்துறை அமைச்சர் அமித்ஷாவோ கூறவில்லை. இந்த பயம் நியாயமான அச்சம். இதில் தெளிவு பெற்றால் மட்டுமே பிரச்சனைக்கு முடிவு கிடைக்கும். இதற்காக அனைத்து கட்சிகளின் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அனைத்து கட்சி கூட்டம் மூலமாக ஒருமித்த கருத்தை எழுப்ப முடியும். திமுகவின் நிலைப்பாடு என்பது தென் மாநிலங்களும், மக்கள் தொகையை குறைத்த மாநிலங்களும் பாதிக்கப்படக் கூடாது. தொகுதி மறுசீரமைப்பை மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி செய்தால், தமிழ்நாடு மிகப்பெரிய பாதிப்பை சந்திக்கும் என்று தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்து திமுக எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார்.