
தூத்துக்குடி அருகே 17 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்த இளைஞர் அதை வீடியோ எடுத்து மிரட்டிய நண்பர்கள் உள்ளிட்டோரை போக்சோ வழக்கில் போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி அருகே 17 வயது சிறுமி ஒருவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த வசந்த் (21) என்ற இளைஞருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து வசந்த் அந்த சிறுமியை காதலிப்பதாக கூறியதால் இருவரும் அடிக்கடி செல்போனில் பேசி வந்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த 2023 ஆம் ஆண்டு தனது உறவினர் வீட்டுக்கு அந்த சிறுமியை அழைத்துச் சென்ற வசந்த், அங்கு அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்துள்ளார்.
இதையடுத்து சில நாட்களில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து சிறுமி வீட்டில் இருந்தபோது அங்கு சென்ற வசந்தின் நண்பரான பொன் முத்துக்குமார் சிறுமியை மிரட்டியுள்ளார். அதேபோல் மதன்குமார் என்பவரும் வீடியோ என்னிடம் உள்ளது அதை சக்திகுமார், பொன் மாடசாமி மற்றும் 17 வயது இளம் சிறார் ஒருவருக்கும் அனுப்பி உள்ளதாக மிரட்டியுள்ளார்.
இதுகுறித்து, ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தார். இதையடுத்து 6 பேர் மீதும் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்த போலீசார், வசந்த் மற்றும் வீடியோ வைத்து மிரட்டிய நண்பர்களை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.