
தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக்கழகத்தின் சார்பாக முன்னணி நிறுவனங்களில் ஊக்கத்தொகையுடன் கூடிய வேலைவாய்ப்பு பயிற்சி அளிக்கும் 'பிரதம மந்திரி இன்டர்ன்ஷிப்' திட்டத்தின் கீழ் மாணவர்கள் பதிவு செய்யும் முகாம் 05.03.2025 அன்று அரசு தொழிற்பயிற்சி நிலையம், கோரம்பள்ளம், தூத்துக்குடியில் நடைபெற உள்ளது.
முன்னணி நிறுவனங்களில் ஊக்கத்தொகையுடன் கூடிய வேலைவாய்ப்பு பயிற்சி அளிக்கும் "பிரதம மந்திரி இன்டர்ன்ஷிப்” திட்டத்தின்படி பத்தாம் வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்பு, ஐ.டி.ஐ, டிப்ளமா மற்றும் இளங்கலை பட்டப்படிப்பு வரை படித்தவர்களுக்கு ஓராண்டு கால தொழிற்பயிற்சி வழங்கி நிறுவனங்களில் வேலை வாய்ப்பு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் ஓராண்டு கால பயிற்சியின் போது பயிற்சியாளர்களுக்கு மாதம் ரூ.5000 ஊக்கத்தொகை மற்றும் பயிற்சிக்காலத்தில் ஒருமுறை உதவித்தொகையாக ரூ.6000 வழங்கப்படும். இதற்கான வயது வரம்பு 21 முதல் 24 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் தூத்துக்குடி மாவட்டத்தில் ஆதித்யா பிர்லா நிதி நிறுவனம், அம்புஜா சிமெண்ட்ஸ் லிட், ECGC Ltd, HDFC Bank Ltd, Indian Oil Corporation Ltd, Indusind Bank Ltd, Jubilant Food Works Ltd, Muthoot Finance Ltd, NLC India Ltd, Power Grid Corporation of India Ltd, TMB போன்ற முன்னணி நிறுவனங்கள் வேலைவாய்ப்பு பயிற்சி வழங்கும் பொருட்டு பதிவு செய்துள்ளன.
“பிரதம மந்திரி இன்டர்ன்ஷிப்” திட்டத்தின் கீழ் படித்த வேலை வாய்ப்பற்ற இளையோர் பதிவு செய்யும் பொருட்டு 05.03.2025 அன்று அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகம், கோரம்பள்ளம், தூத்துக்குடியில் வைத்து Candidate Mobilisation Drive - ஆனது காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை நடைபெற உள்ளதால், படித்த வேலைவாய்ப்பற்ற இளையோர் இந்த நல்வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இத்திட்டத்தின் கீழ் 21 முதல் 24 வயதிற்குட்பட்ட இந்திய குடிமக்கள் மட்டுமே விண்ணப்பிக்க இயலும்.
குடும்ப வருமானம் ஆண்டுக்கு 8 லட்சம் ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும். விண்ணப்பதாரரோ, விண்ணப்பதாரரின் பெற்றோரோ, விண்ணப்பதாரரின் கணவன் அல்லது மனைவியோ மத்திய மற்றும் மாநில அரசின் கீழ் பணிபுரிபவராக இருத்தல் கூடாது.
மேலும் முழு நேர பணியாளர்கள் மற்றும் தற்போது படித்துக் கொண்டிருக்கும் மாணவ, மாணவிகள் NAPS மற்றும் NATS திட்டத்தின் கீழ் தொழிற்பழகுநர் பயிற்சி பெற்றவர்கள், மத்திய மற்றும் மாநில அரசின் கீழ் ஏதாகிலும் ஒரு திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்று வருபவர்கள் இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க இயலாது.
மேலும் இப்பயிற்சியில் சேர விரும்புவோர் www.pminternship.mcapov.in என்ற இணையதளம் வாயிலாகவும் விண்ணப்பிக்கலாம் மாவட்ட ஆட்சித்தலைவர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.