• vilasalnews@gmail.com

தூத்துக்குடி கொத்தனாரு பாடல்... காவல்துறை நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை!

  • Share on

தனியாகக் காண வருவார்

இவள் தளிர் போல தாவி அணைவாள்

கனி போல சேர்ந்து மகிழ்வாள்

இரு கண் மூடி மார்பில் துயில்வாள்

எழிலான கூந்தல் கலையாதோ

இதமான இன்பம் மலராதோ..


மலராத பெண்மை மலரும்

முன்பு தெரியாத உண்மை தெரியும்

மயங்காத கண்கள் மயங்கும்

முன்பு விளங்காத சேதி விளங்கும்

இரவோடு நெஞ்சம் உருகாதோ

இரண்டோடு மூன்று வளராதோ..


பின்னணி கோரஸில் பாடிவந்த செல்வி எல்.ஆர்.ஈஸ்வரி முதன் முதலாக முன்னணிக்கு வந்து முழுமையாகப் பாடிய முதல் பாடலிது என்பது இப்பாடலுக்கான முதல் தகவல். மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் அறிமுகப்படுத்தப்பட்ட  இப்பாடகி தமிழ்த் திரையில் தனது முத்திரையை பதித்து உலா வந்ததை நாம் அனைவரும் அறிவோம். 


இப்பாடலில் உள்ள மற்றுமொரு செய்தி என்னவென்றால், அன்றைய காலக்கட்டத்தில் தணிக்கைக் குழுவிற்கு சாஸ்திரி என்பவர் தலைவராக இருந்தார்.  கண்டிப்புக்கு பெயர் போனவர்.  தணிக்கைக் குழுவில் இப்பாடல் உட்படுத்தப்பட்டபோது, கவிஞருக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது.  கவிஞரே, இப்பாடலில் நீங்கள் சொல்லியிருக்கும் விஷயம் – கத்தரி வைக்கச் சொல்கிறது. ஆனால் சொல்லியிருக்கும் விதம் கத்தரிக்க விட மாட்டேன் என்கிறது.  என்ன செய்வது என்று கவிஞரிடம் கேட்டாராம் சாஸ்திரி.


இப்படியான ஒரு அந்தரங்கத்தையும், காமத்தையும் கவியரசு கண்ணதாசன் வார்த்தை முத்துக்களை வழங்கி  கவிஞரின் பேனா முனையில் பூத்த அந்த வரிகளில் பெண்மையின் கெளரவம் மலர்ந்து கிடக்கிறது.  இதைவிட எப்படி அந்த விஷயத்தைச் சொல்லிவிட முடியும் என்று படிப்பவரை மட்டுமின்றி கேட்பவரையும் வியக்க வைக்கிறது. 


இப்படியான சூழலில், இன்று இரட்டை அர்த்த வார்த்தைகளோடு, காதில் கேட்கவே கூசும் அளவிற்கு அருவருக்க தக்க வகையில், பெண்ணையும், தூத்துக்குடி ஊரின் பெயரையும் தூற்றும் வகையில் தூத்துக்குடி கொத்தனார் என்ற பாடல் சமூகத்தை சீரழிக்கும் வகையில் தற்போது சமூக வலைதளத்தில் பரவி வருகிறது. 


சமூக வலைதளம் ஒரு குப்பை அதில் தூத்துக்குடி கொத்தனார் பாடல் போன்று அருவருப்பான வார்த்தைகளை கேட்க கூடிய நிலைதான் வரும் நாம் அதை புறம்தள்ளி விட்டு போக வேண்டும் என நம் மனதை நாம் மாற்றிக் கொண்டு செல்லக் கூடாது. இது போன்ற குப்பைகளை யார் தான் அப்புறப்படுத்துவது? எப்போதுதான் அப்புறப்படுத்துவது? 


பெண்ணின் உறுப்புக்கான லோக்கல் வார்த்தையைப் போட்டு எழுதப்பட்ட கேடு கெட்ட முதல் தமிழ்ப் பாடல் இதுவாக தான் இருக்கும். 


பாடியவருக்கு வேறு தமிழ் ஒரு வார்த்தை தெரியாது போல் இருக்கிறது. அவருக்குத் தமிழ் சொல்லித் தர யாரும் இல்லையா? இதற்கு இசை அமைத்தவருக்கும் தமிழ் தெரியாதா? அப்புறம் ஏண்டா இப்படிப்பட்ட பாடல் வரிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து இப்படி ஒரு பாடலை வெளியிட்டிருக்கிறீர்கள்?


சினிமாவில் தணிக்கை செய்ய தணிக்கைக் குழு இருக்கிறது. ஆனால் இணைய உலகில் தணிக்கையெல்லாம் கிடையாதா? இதை சைபர் கிரைம் போலீசார் கவனியுங்கள். இப்படி ஒரு கெட்ட பாட்டால் சமுதாயம் சீரழிந்து விடாது. அது ஏற்கனவே சீர்திருத்தவே இயலாதபடி சீரழிந்துதான் கிடக்கிறது என்று சிலரும் சொல்லலாம். ஆனால், இது போன்ற பாடல்களை ஆரம்பத்திலேயே அழிக்காமல் விட்டால், இது போல பாடல்கள் புற்றீசலாக தொடரும் என்பதில் சந்தேகமில்லை.


சிம்பு பாடிய பீப் பாடலுக்காக கொதித்தெழுந்த இந்த தமிழகம் இப்பாடல்களை மட்டும் ஏனோ வேடிக்கை பார்த்து கொண்டிருக்கிறது.


இப்பாடலில் பெண் மற்றும் தூத்துக்குடி என்ற ஊரின் பெயரையும் சேர்த்தே கேவலப்படுத்திய செயல் வன்மையாக கண்டிக்க தக்கதே. ஆகவே, தூத்துக்குடி மாவட்ட காவல்துறையும், தமிழ்நாடு சைபர் கிரைம் காவல்துறையும் இது போன்ற காதில் கேட்க கூசும் வகையில் பாடப்பட்டு, சமூக வலைதளத்தில் வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்து அப்பாடலை சமூக வலைதளத்தில் தடை செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

  • Share on

தூத்துக்குடியில் குடும்ப ஆட்சியை மாற்றி காட்டுவோம் : தவெக மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆக்னல்!!

மஞ்சள் காய்ச்சல் நோய்த்தாக்கம்.... தூத்துக்குடி மக்களுக்கு கலெக்டர் கொடுத்த உடனடி தகவல்!

  • Share on