
தமிழ்நாட்டில் மன்னராட்சி மாற தளபதி உழைத்துக்கொண்டிருப்பதை போல, வரும் 2026 தேர்தலில் தூத்துக்குடியில் குடும்ப ஆட்சியை மாற்றி காட்டுவோம் என தூத்துக்குடி தவெக மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் பேசினார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் பூத் கமிட்டிப் பற்றிய விளக்க கூட்டம் தூத்துக்குடி தனியார் மஹாலில் நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அக்கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.
பல நூறு கோடி ரூபாய் வருமானத்தை உதறித் தள்ளிவிட்டு மக்களுக்காக சேவையாற்ற வந்த தளபதியின் பரிணாம வளர்ச்சி குறித்த காணொளியானது காட்சிப்படுத்தப்பட்டது. மேலும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்-யை 2026ல் முதல்வராக்குவோம் என்ற இலக்கை நோக்கி இலட்சியத்தோடு பயணிப்போம் என கட்சியினர் சூளுரைத்தனர்.
இதனைத் தொடர்ந்து, கூட்டத்தில் பேசிய தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆக்னல்:-
2ஆம் ஆண்டு துவக்க விழாவில் தமிழ்நாட்டில் எதிர்க்கட்சியாக நாம் உருவாகி இருக்கின்றோம் என்று தலைவர் கூறியது போல தூத்துக்குடி மாவட்டத்தில் எதிர்க்கட்சியாக நாம் தாம் உருவாகி இருக்கின்றோம். அது என்னுடைய தனிப்பட்ட உழைப்பு மட்டுமல்ல உங்களின் ஒவ்வொரு உழைப்பும். தமிழ்நாட்டில் மன்னராட்சி மாற தளபதி உழைத்துக் கொண்டிருப்பதை போல வரும் 2026ல் தூத்துக்குடியில் குடும்ப ஆட்சியை மாற்றி காட்ட வேண்டும். தூத்துக்குடி மாவட்டத்தில் மதச்சார்பற்ற ஜாதி, மதங்களைக் கடந்த ஒரு அரசியலை நாம் உருவாக்கிக் கொண்டிருக்கின்றோம்.
நான் எவ்வாறு உண்மையாக உழைத்துக் கொண்டிருக்கிறேனோ நிர்வாகிகளும் அதேபோல் தான். ஆண்ட கட்சியாக இருக்கட்டும் ஆண்டுகொண்டு இருக்கிற கட்சியாக இருக்கட்டும் நமக்கு ஒரு வாய்ப்பு யாரும் கொடுக்கவில்லை. ஆனால் தளபதி ஒரு வாய்ப்பை கொடுத்திருக்கிறார் என்றால் அதனை நாம் பயன்படுத்த வேண்டும்.
விஜய்க்கு புனைப்பெயர் வைத்து தளபதி விஜய் என்று கூறி வருகிறோம். ஆனால் ஒரு சில பேரை தளபதி என்று கூறி வந்த நிலையில், அதனை அவர் மாற்றி அப்பா என்று கூறச் சொல்கின்றார். ஆகவே, தளபதி என்றால் தளபதி விஜய் மட்டும் தான் என்றார்.
முன்னதாக, 2026-ல் தளபதியை முதல்வராக்குவோம் #TVKforTN என வைக்கப்பட்டுள்ள பேனரில் கட்சியினர் அனைவரும் கையெழுத்திட்டனர்.