
தூத்துக்குடி மாவட்ட போலீசார், பிப்ரவரி 29 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருநெல்வேலி மேலப்பாளையம் நேதாஜி தெருவை சேர்ந்த லிங்கத்துரை என்பவருடைய மகன் வசந்த். இவரது பூர்வீக வீடு, தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடம் அருகே உள்ள சாலைப்புதூர் கிராமத்தில் அமைந்துள்ளது. இந்த பூர்வீக வீடு மற்றும் நிலம் தொடர்பாக வசந்துக்கும், அவருடைய உறவினரான செல்வராஜூக்கும் இடையே தகராறு ஏற்பட்டிருக்கிறது.
இதுகுறித்து தூத்துகுடி தட்டார்மடம் காவல் நிலையத்தில் வசந்த் புகார் மனு அளித்தார். இது தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக தட்டார்மடம் போலீசார் வசந்துக்கு சம்மன் அனுப்பினர். அதில், தாங்கள் கொடுத்த புகாரின் பேரில் விசாரணை நடத்துவதற்காக தட்டார்மடம் போலீஸ் நிலையத்தில் 29-2-2025 அன்று காலை 10 மணிக்கு ஆஜராக அறிவுறுத்தப்படுகிறீர்கள் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
ஆனால், இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்துக்கு 28 நாட்களே இருந்தது. ஆனால் பிப்ரவரி 29 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு தூத்துக்குடி மாவட்டம், தட்டார்மடம் போலீசார் தவறுதலாக சம்மன் அனுப்பிய விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
பிப்ரவரி மாதத்தை பொறுத்தவரை 28 நாட்கள் தான் இருக்கும், ஒவ்வொரு நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே பிப்ரவரி 29 ஆம் தேதி வரும். கடந்த ஆண்டு லீப் ஆண்டு என்பதால் பிப்ரவரி மாதத்தில் 29 நாட்கள் வந்தது. ஆனால் இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் 28 நாட்கள் தான் உள்ளது என்பது குறிப்பிட தக்கது.