
விளாத்திகுளம் பேரூராட்சி தலைவர் மகன் சாலை விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் பேரூராட்சி மன்ற தலைவராக திமுகவைச் சேர்ந்த அய்யன்ராஜ் உள்ளார். இவரது இளைய மகன் தாமரைச்செல்வம் (27). இவர் வெளிநாட்டில் வேலை செய்து வந்துள்ளார்.
இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்தவர், விளாத்திகுளத்தில் அவரின் தந்தையின் டீக்கடையை கவனித்து வந்துள்ளார். இந்த நிலையில் தாமரைச் செல்வம் அவரது நண்பரான விளாத்திகுளம் சாலையம் தெரு பகுதியை சேர்ந்த குருசாமி என்பவரின் மகன் ஸ்ரீராம்(33) உடன் இருவரும் இருசக்கர வாகனத்தில் கோவில்பட்டியில் இருந்து விளாத்திகுளம் நோக்கி வந்து இன்று ( மார்ச் 1 ) கொண்டிருந்த போது,
கோவில்பட்டி - எட்டையபுரம் சாலை திட்டங்குளம் அருகே முன்னாள் சென்ற டிராக்டர் மீது தாமரைச்செல்வம் ஒட்டி வந்த இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில், பலத்த காயம் அடைந்த தாமரைச்செல்வம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். உடன் வந்த ஸ்ரீராம் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விளாத்திகுளம் பேரூராட்சி மன்ற தலைவர் மகன் சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.