
ஒருங்கிணைந்த நெல்லை மாவட்டம் ஐவகை நிலங்களையும் தன்னகத்தே கொண்டுள்ள சிறப்புகளை மட்டுமல்லாது கலை, இலக்கிய படைப்புகளுக்கும் பெயர் பெற்று விளங்குகிறது. எட்டயபுரத்து முண்டாசு கவியான பாரதியார் தொடங்கி பல எழுத்தாளர்கள், கவிஞர்கள் வசித்த பூமி இந்த ஒருங்கிணைந்த நெல்லை சீமை.
இன்றளவும் இங்கே எழுத்தாளர்கள் பட்டாளம் அணிவகுத்து கொண்டிருக்கிறது. இதனால் தான் பல சாகித்ய அகாடமி விருதுகள் நெல்லை, தூத்துக்குடி மாவட்ட எழுத்தாளர்களின் கைகளில் தவழ்ந்து கொண்டு இருக்கின்றது.
அந்த வரிசையில், கடலோடிய சமூகம் தலைமையை பெற்றாக வேண்டும் என்று எழுத்துக்களால் போராடுபவர். சமகால பரதவ மக்களை அறிவார்ந்த அரசியல் ஆளுமை நிலைகளுக்கு கொண்டு வர முனையும் கூர் முனை எழுத்துக்களை வடிவமைப்பதில் வல்லவர். அவர் தான் தூத்துக்குடியை சேர்ந்த எழுத்தாளர் யூ.அண்டோ.
இவர் நெய்தல் நில மக்களின் வாழ்வியலை ஆராய்ந்து பதிவு செய்து வருகிறார். அதை அவர்களின் வட்டார வழக்கங்களிலேயே பதிவு செய்து வருகிறார். பல்வேறு களங்களை முன்வைத்து படைப்புகள் பல வந்து கொண்டே இருக்கின்றன. ஆனால் நெய்தல் மண் சார்ந்த படைப்புகள் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே இருக்கின்றன.
தமிழ் இலக்கியத்தில் நெய்தல் மண் சார்ந்த கதைகள் குறிப்பிட்ட எல்லைக்குள் சுருக்கப்பட்டு விட்டது. கடலோடு தொடர்பில் இருப்பவர்களுக்கானது மட்டும் நெய்தல் மக்களின் வாழ்வியல் அல்ல. கடலுக்கும், தங்களுக்குமான தொப்புள் கொடி அறுக்கப்பட்டு நெய்தல் நிலத்தில் வாழும் மக்களின் அன்றாட வாழ்வியலும் சேர்ந்தது தான். இந்த வாழ்வியல் முறைகள் இலக்கியங்களில் அதிகமாக பேசப்படாத நிலை உள்ளது.
ஆகவே, நெய்தல் பகுதியில் வாழ்ந்து வந்த மக்கள் பின்பற்றி வந்த வாழ்வியல் முறைகளை உயிர்ப்புடன் பின்பற்றி அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்க்கும் வகையில் நெய்தல் யூ.அண்டோ படைப்புகள் அமையும்.
அதோடு மட்டுமல்லாமல், மறந்த, மறைக்கப்பட்ட தேர்மாறன் உள்ளிட்ட பரவத குல இந்திய விடுதலை போராட்ட வீரர்களின் போராட்ட வாழ்வியலையும், அடையாளத்தையும், அவர்களின் வாள் முனை வீரத்தையும், தன் பேனா முனையால் சமகால மக்களுக்கு காட்டிவரும் நெய்தல் மண்ணின் மந்தர் நெய்தல் யூ.அண்டோ ஆவார். இத்தகைய மாமனிதருக்கு தான் தற்போது இன்று ( மார்ச் 1 ) தமிழக அரசு 2023 ஆம் ஆண்டிற்கான தமிழ்ச் செம்மல் விருது வழங்கியுள்ளது.
தமிழ் வளா்ச்சிக்காக பாடுபடும் ஆா்வலா்களின் தொண்டினை பெருமைப்படுத்தி, ஊக்கப்படுத்தும் வகையில் தமிழ் வளா்ச்சித்துறை சாா்பில் ஆண்டுதோறும் தமிழ்ச் செம்மல் விருது வழங்கப்பட்டு வருகிறது. இவ்விருது பெறுபவா்களுக்கு ரூ.25,000 ரொக்கப் பரிசுடன், தகுதியுரையும் வழங்கப்படுகிறது. என்பது குறிப்பிட தக்கது.