
தூத்துக்குடி மாவட்ட திமுக செயலாளராக பரதவரை அறிவிக்க வேண்டும் என பாண்டியபதி தேர்மாறன் கல்லறை மீட்புக்குழு கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக திராவிட முன்னேற்றக் கழக தலைவர், தமிழக முதல்வருக்கு பாண்டியபதி தேர்மாறன் கல்லறை மீட்புக்குழு இணை அமைப்பாளர் இன்னாசி அனுப்பியுள்ள மனுவில்:-
திமுக கட்சியின் உள்கட்டமைப்பினை வலுப்படுத்தும் நடவடிக்கையாக, இரண்டு சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய மாவட்டங்களாக பிரிக்க உள்ளதாக அறிகின்றோம்.
தமிழகத்தில், கடலோரம் முழுவதும் மற்றும் உள்நாட்டில் பரவலாக வசிக்கும் பரதவர்களின் பிரதிநிதிகளுக்கு, சமூக பிரதிநித்துவ அடிப்படையில் முன்னணி தமிழக அரசியல் கட்சிகளில் மாவட்ட கழக செயலாளர் பதவிகள் வழங்கப்படாமல் உள்ளன.
இந்த குறைபாட்டினை தீர்க்கும் வண்ணமாக, தற்பொழுது ஆளும் கட்சியாக தங்களின் கட்சி இருக்கின்ற பட்சத்தில், பரதவ மக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியினை தலைமையாக கொண்ட மாவட்டத்திற்கு, தங்கள் கட்சியில் உள்ள பரதவர் ஒருவரை மாவட்ட கழக செயலாளராக அறிவிக்க வேண்டுகின்றோம்.
தாங்கள் இந்த அறிவிப்பினை செய்யும் பட்சத்தில், மற்ற அரசியல் இயக்கங்களுக்கு, தங்களின் இந்த செயல்பாடு உண்மையான சமூக பிரதிநித்துவத்திற்கு, ஒரு நல்ல முன்னுதாரணமாக அமையும் என்பதனை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.