
ஓட்டப்பிடாரம் அருகே தெருவில் பைக்கில் அதிவேகமாக சென்றதை கண்டித்த வாலிபரை சரமாரியாக கல்வீசி தாக்கிய 3பேரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அருகே உள்ள புதியம்புத்தூர் கீரை தோட்டம் தெருவை சேர்ந்த முனியசாமி மகன் மாடசாமி (23). கட்டிட தொழிலாளி. இவர், நேற்று முன்தினம் மாலையில் வீடுமுன்பு உட்கார்ந்து இருந்தார். அப்போது அந்த தெரு வழியாக, அதே ஊரைச் சேர்ந்த கணேசன் மகன் முத்துகிருஷ்ணன் (25), தங்கராஜ் மகன் தங்ககுமார் (26), ராஜன் மகன் விக்னேஷ் (24) ஆகியோர் அதிேவகமாக பைக்கில் சென்றுள்ளனர். இதை மாடசாமி கண்டித்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த அந்த 3பேரும் சிறிது நேரத்தில் கற்களுடன் திரும்பி வந்துள்ளனர்.
அங்கு அமர்ந்து இருந்த மாடசாமி மீது அந்த 3பேரும் சரமாரியாக கற்களை வீசி தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த அவரது அலறல் சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்தினர் ஓடிவந்துள்ளனர். இதை பார்த்த அந்த 3 பேரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதில் பலத்த காயம் அடைந்து ரத்தவெள்ளத்தில் கிடந்த மாடசாமியை அக்கம் பக்கத்தினர் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இச்சம்பவம் குறித்து புதியம்புத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்துகிருஷ்ணன், தங்ககுமார், விக்னேஷ் ஆகிய 3பேரையும் கைது செய்தனர். பின்னர் அந்த 3 பேரும் ஓட்டப்பிடாரம் மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர். நீதிபதி உத்தரவின் பேரில் அந்த 3 பேரும் பேரூரணி மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டனர்.