
பாலியல் குற்றங்களில் இதுபோல் அதிரடி நடவடிக்கை தொடரும் என்று மாவட்ட கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
தூத்துக்குடியில் பெண்ணுக்கு என்ன நடந்தது?
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியை சேர்ந்த இளைஞர் ஒருவர் 20 வயது பெண்ணை காதலித்து வந்த நிலையில், பெண்ணின் குடும்பத்தில் காதலுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பவே, அதையும் மீறி தான் காதலித்த பெண்ணை சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டார் அந்த இளைஞர்.
பெண் வீட்டாரால் காதல் மணைவிக்கு எந்த ஆபத்தும் வந்துவிடக்கூடாது என்பதற்காக, தன்னுடைய சமூக மக்கள் அதிகமாக வசிக்கும் பகுதியிலேயே, ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து குடிபோனார் அந்த இளைஞர். இந்த தம்பதிக்கு தற்போது 6 மாதத்தில் கைக்குழந்தை உள்ளது.
இந்நிலையில், இளைஞருக்கு கேரளாவில் வேலை கிடைக்கவும், தன்னுடைய மக்கள், மனைவியை கவனித்து கொள்வார்கள் என்ற நம்பிக்கையும் இளைஞருக்கு அதிகமாகவே இருக்கவே குழந்தை, மனைவியை தனியாக விட்டுவிட்டு கிளம்பி சென்றுள்ளார்.
கணவன் வெளியூர் சென்றுவிட்டதால், பகல் நேரத்தில் கைக்குழந்தையுடன் வாசலில் உட்கார்ந்து, அக்கம்பக்கத்தினருடன் பேசி பொழுதை கழித்துள்ளார் அந்த பெண். இந்த பெண் தனிமையில் இருப்பதை அங்குள்ள 2 இளைஞர்கள் நோட்டமிட்டு வந்துள்ளதாக தெரிகிறது.
இந்நிலையில், கடந்த 19ஆம் தேதி இரவு வீட்டின் கதவை முழுமையாக தாழ்ப்பாள் போடாமல், கைக்குழந்தைக்கு அந்த பெண் பால் புகட்டி கொண்டிருந்தாராம். அப்போது அந்த 2 இளைஞர்கள் போதையில், அத்துமீறி வீட்டுக்குள் புகுந்து, அப்பெண்ணை கடுமையாக தாக்கியிருக்கிறார்கள்.
குழந்தையின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டிய 2 கொடூரர்கள், அப்பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர். பிறகு இதை வெளியே சொன்னால் குழந்தை உட்பட குடும்பத்தில் உள்ள எல்லோரையும் கொன்றுவிடுவோம் என்றும் மிரட்டி சென்றதாக தெரிகிறது.
இதற்கு பிறகு கதவை பூட்டிக்கொண்டு, அந்த பெண் பீதியில் உட்கார்ந்திருந்தபோது, மீண்டும் நள்ளிரவு 1.30 மணிக்கு கதவு தட்டப்பட்டுள்ளது. இதனால் யார் என்று அறிய மெல்ல திறந்து பார்த்துள்ளார் அந்த பெண்.
உடனே கதவை தள்ளிக்கொண்டு, அதே 2 போதை கொடூர இளைஞர்கள் வீட்டுக்குள் புகுந்துள்ளனர். மீண்டும் குழந்தையின் கழுத்தில் கத்தியை வைத்து, அப்பெண்ணை மீண்டும் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். பிறகு விடியகாலையில், 2 இளைஞர்களும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டதாக தெரிகிறது.
இதனால், கடுமையான பாதிப்புக்கும் உள்ளான அந்த பெண், அதிர்ச்சியில் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடந்தார். பெண்ணின் முகம் சோகமாக இருப்பதை பார்த்த உறவினர்கள், கேரளாவில் உள்ள அவரது கணவருக்கு தகவல் தந்து வரவழைத்தனர்.
அதன் பிறகுதான் தன்னுடைய கணவரிடம் நடந்ததை சொல்லி, வாழவே பிடிக்கவில்லை என்று அழுதுள்ளார் அப்பெண். பிறகு மனைவிக்கு தைரியம் தந்த கணவர், கோவில்பட்டி போலீசில் எழுத்துப்பூர்வமாக புகார் தந்துள்ளார். இந்த புகார் உடனடியாக மாவட்ட எஸ்.பி.யின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டதையடுத்து, சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு தீவிர சிகிச்சை அளிக்க ஏற்பாடானது.
பின், 4 தனிப்படைகள் அமைத்த போலீசார், 2 இளைஞர்களையும் தேட துவங்கினார்கள். இறுதியில், மாரியப்பன் ( 28 ), மாரி செல்வம் ( 27 ) இருவரும் இந்த கொடுமையை செய்தது உறுதியானது. இதனால் அவர்களை போலீஸார் பிடிக்க முயன்றபோது, மாரியப்பன் தப்பியோட முயன்று, கீழே விழுந்து, வலது கால், கையில் முறிவு ஏற்பட்டது.
அதேபோல, தூத்துக்குடி அருகே புதுக்கோட்டை காட்டுப்பகுதியில் பதுங்கியிருந்த மாரிசெல்வத்தையும் கைது செய்ய முயன்றபோது, போலீசாரையே அரிவாளால் தாக்கிவிட்டு தப்ப முயன்றுள்ளாராம். எனவே, மாரிசெல்வத்தின் இடது காலில் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தனர். கைதான 2 இளைஞர்களுமே வழிப்பறி கொள்ளையர்கள் என்பது தெரியவந்துள்ளது. மாரிசெல்வம் தாக்கியதில் காயம் அடைந்த இரண்டு போலீசார் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களை நேரில் சந்தித்தார் மாவட்ட எஸ்பி.
பின்னர், பாலியல் குற்றவாளிகள் மீதான இது போன்ற அதிரடி நடவடிக்கைகள் தொடரும் என்று எதிர்பார்க்கலாமா என்று செய்தியாளர்கள் எஸ்.பி, யிடம் எழுப்பிய கேள்விக்கு எதிர்பார்க்கலாம். "பாலியல் குற்றங்களில் இதுபோல் அதிரடி நடவடிக்கை தொடரும்" என்றும் எச்சரித்தார்.