
தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் வரும் 26ம் தேதி மஹா சிவராத்திரி திருவிழா ''ஓம் நமச்சிவாய'' சிறப்பு பஜனைகளுடன் கோலாகலமாக நடைபெறுகிறது., இவ்விழாவில் பக்தர்கள் திரளாக பங்கேற்றிடுமாறு ''சாக்தஸ்ரீ'' சற்குரு ஸ்ரீபிரத்தி சுவாமிகள் அழைப்பு விடுத்துள்ளார்.
தூத்துக்குடி கோரம்பள்ளம் அய்யனடைப்பு ஸ்ரீசித்தர் நகரிலுள்ள ஸ்ரீசித்தர் பீடத்தில் தென்தமிழகத்திலேயே வேறு எங்கும் இல்லாத தனிச்சிறப்பாக குருபகவான் குருமகாலிங்கேஸ்வராக தனி சந்தியில் எழுந்தருளி அருள்பாலித்து வருகிறார்.
ஆன்மிக சிறப்புபெற்ற குருமகாலிங்கேஸ்வரர், நந்தி பகவானுக்கு ஆண்டுதோறும் மஹா சிவராத்திரி விழா ''சாக்தஸ்ரீ'' சற்குரு ஸ்ரீபிரத்தி சுவாமிகள் தலைமையில் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன்படி இந்த ஆண்டிற்கான மஹா சிவராத்திரி விழா வரும் 26ம் தேதி(புதன்கிழமை) கொண்டாடப்படுகிறது.
அன்று காலை 10மணிக்கு மஹா கணபதி, நவக்கிரக ஹோமம், கோ பூஜை, மஹாலெட்சுமி ஹோமத்துடன் மஹா சிவராத்திரி விழா துவங்குகிறது.
மாலை 6மணிக்கு நவக்கிர பூஜை, லலிதா சகஸ்ர நாமம், மஹா பூஜை, தீபாரதனையும், இரவு 9மணிக்கு மஹா சிவராத்திரி முதல் கால வழிபாடுகளும், மஹா பூர்ணாகுதி, அபிஷேக அலங்கார தீபாரதனைகளும் ''சாக்தஸ்ரீ'' சற்குரு ஸ்ரீபிரத்தி சுவாமிகள் தலைமையில் கோலாகலமாக நடைபெறுகிறது.
சிவராத்திரி விழாவில் சிறப்பு விருந்தினராக மலேசியா கடாரம் டத்தோ செந்திநாதன் பங்கேற்கிறார். இரவு 10மணிக்கு ஆன்மிக புகழ் ''திருவனந்தபுரம் சுவாதி பாலச்சந்திரன்'' குழுவினரின் ''சிவாய நம'' சிறப்பு பஜனை நடைபெறுகிறது.
தொடர்ந்து நள்ளிரவு 12மணிக்கு மஹாஅபிஷேகம், தமிழ்மறையில் தேவார திருவாசக பாராயணத்துடன் இரண்டாம் கால வழிபாடும், அதனைத்தொடர்ந்து அதிகாலை 2மணிக்கு அபிஷேகம், சதுர்வேத பாராயணத்துடன் மூன்றாம் கால வழிபாடும், அதிகாலை 4மணிக்கு அபிஷேகம், அலங்கார தீபாரதனையுடன் நான்காம் கால வழிபாடும் நடைபெறுகிறது.
அதனைத்தொடர்ந்து, அதிகாலை 5மணிக்கு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்குதலுடன் மஹா சிவராத்திரி விழா நிறைவடைகிறது. இவ்விழாவில் ''ஓம் நமச்சிவாய'' ஸ்லோகம் அதிகளவில் எழுதுபவர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்படுகிறது. இதற்கு அடுத்த நாளான 27ம்தேதி (வியாழக்கிழமை) அமாவாசை சிறப்பு மஹா யாக வழிபாடுகள் நடைபெறுகிறது.
மஹா சிவராத்திரி விழா மற்றும் ''ஓம் நமச்சிவாய'' சிறப்பு பஜனையில் ஆன்மீக அன்பர்கள், பக்தர்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்று இறையருள் பெற்றுச்செல்லுமாறு ''சாக்தஸ்ரீ'' சற்குரு ஸ்ரீபிரத்தி சுவாமிகள் கேட்டுக்கொண்டுள்ளார்.
விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீசித்தர் பீடத்தின் சுவாமிகள் ''சாக்தஸ்ரீ'' சற்குரு ஸ்ரீபிரத்தி சுவாமிகள் தலைமையில் விழாக்குழுவினர், மகளிரணியினர் மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர்.