
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் கைக்குழந்தையுடன் தனியாக இருந்தாக இளம்பெண் ஒருவர் தான் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாக மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
மது போதையுடன் நள்ளிரவில் வீடு புகுந்த அதே பகுதியைச் சேர்ந்த இரண்டு பேர், தன்னை கத்தியைக் காட்டி மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாக புகாரில் தெரிவித்திருந்தார். அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் குற்ற சம்பவத்தில் தொடர்புடைய மாரி செல்வம் மற்றும் மாரியப்பன் ஆகிய இருவரை தீவிரமாக தேடி வந்தனர்.
இந்நிலையில், மாரியப்பனை போலீசார் பிடிக்க சென்றபோது தப்பியோட முயன்ற அவர் தடுமாறி கீழே விழுந்ததில் வலது காலில் முறிவு ஏற்பட்டது. தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அவரை அனுமதித்து மாவுக்கட்டு போட்டனர்.
மேலும் வழக்கில் தொடர்புடைய மற்றொருவரான மாரி செல்வத்தை போலீசார் தேடி வந்தநிலையில், தூத்துக்குடி அருகே புதுக்கோட்டை பகுதியில் பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து, காவல்துறையினர் அவரை கைது செய்ய முயன்ற போது காவல் உதவி ஆய்வாளர் ராஜபிரபு மற்றும் காவலர் பொன்ராம் ஆகியோரை அரிவாளால் தாக்கி விட்டு தப்பி ஓட முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் மாரி செல்வத்தை இடது காலில் சுட்டு பிடித்த போலீசார் அவரை சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்து கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு. அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தூத்துக்குடியில் பாலியல் புகாரில் சிக்கிய இருவரில் ஒருவர் தப்பிக்க முயன்று காலில் அடிபட்டு மாவு கட்டுடனும், மற்றொருவர் துப்பாக்கியால் சுட்டுபிடிக்கப்பட்டும் நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.